செய்திகள்
அப்துல்கலாம் மணிமண்டபத்திற்கு வந்த பொதுமக்கள் அங்குள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய போது எடுத்த படம்.

1½ ஆண்டுக்கு பிறகு ராமேசுவரத்தில் அப்துல்கலாம் நினைவிடம் திறப்பு

Published On 2021-08-25 03:04 GMT   |   Update On 2021-08-25 03:04 GMT
1½ ஆண்டுக்கு பிறகு ராமேசுவரத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடம் திறக்கப்பட்டது. பொதுமக்கள் நேரில் சென்று பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினர்.
ராமேசுவரம் :

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியதை தொடர்ந்து கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 21-ந்தேதி முதல் ராமேசுவரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவிடத்திற்கு பார்வையாளர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. அன்று முதல் நினைவிடமும் மூடப்பட்டது.

அதுபோல் தமிழகத்தில் அனைத்து அருங்காட்சியகங்கள் திறக்கப்பட்ட நிலையிலும் ராமேசுவரத்தில் உள்ள அப்துல்கலாம் நினைவிடமோ கடந்த ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் திறக்கப்படாமல் தான் இருந்து வந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து ராமேசுவரம் அருகே பேக்கரும்பு பகுதியில் உள்ள ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடம் 521 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டது.

1½ ஆண்டுக்கு பிறகு திறக்கப்பட்டதை தொடர்ந்து அப்துல்கலாம் நினைவிடத்தில் கலாமின்‌ அண்ணன் மகன் ஜெயினுலாபுதின், மகள் நசீமா மரைக்காயர், மருமகன் நிஜாமுதீன், பேரன் சேக் சலீம் உள்ளிட்டோர் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

இதைதொடர்ந்து வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பலர் கலாம் நினைவிடத்தை பார்த்து விட்டு மரியாதை செலுத்தி விட்டு சென்றனர். மேலும் கலாம் மணி மண்டப வளாகத்தில் உள்ள கலாமின் முழு உருவசிலை மற்றும் பிரமோஸ் ஏவுகணையின் மாதிரியும் மிகுந்த ஆச்சரியத்தோடு பார்த்தனர்.

கலாம் மணிமண்டபத்திற்கு வந்தவர்கள் போலீசாரின் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.மேலும் மணிமண்டபத்தின் உள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கலாமின் பல கண்டுபிடிப்புகள் சாதனைகள் மற்றும் பல உருவ சிலைகள் அமைந்துள்ள‌ இடங்களுக்கு பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. நினைவிடம் வந்தவர்களுக்கு அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
Tags:    

Similar News