செய்திகள்
நிவேதா

சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவி தற்கொலையில் புது திருப்பம்

Published On 2020-01-13 17:32 GMT   |   Update On 2020-01-13 17:32 GMT
காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயமானதால் சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவி உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்துள்ளது.
கருப்பூர்:

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பாப்பிரெட்டிப்பட்டி, ஜம்மன அள்ளி கோபாலபுரத்தை சேர்ந்தவர் திருமலை. இவரது மூத்த மகள் நிவேதா (வயது 23). இவர், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. (தாவரவியல்) 2-ம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த நிவேதா நேற்று முன்தினம் திடீரென அறை எண்.75-ல் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி நிவேதா தங்கியிருந்த அறை முழுவதும் போலீசார் சோதனை செய்தனர். அறையில் கைப்பற்றப்பட்ட நோட்டு, புத்தகங்களில் காதல் குறியீடு, கவிதைகள் எழுதி வைக்கப்பட்டிருந்தது. மேலும், மாணவியின் 3 பக்க கடிதம் ஒன்று சிக்கியது.

அந்த கடிதத்தில், வாலிபரின் பெயரை குறிப்பிட்டு கவிதைகள் எழுதப்பட்டிருந்தது. மேலும் அதில், "மாமா,  என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள். உன்னை பார்த்த நாள் முதல் என் மனதில், உன்னை கணவனாக ஏற்றுக் கொண்டுள்ளேன். அதன்படி வாழ்ந்து வருகிறேன். இந்த ஜென்மத்தில், உன்னை மட்டும் தான் திருமணம் செய்து கொண்டு வாழ்வேன். நீ, இந்த காதலை ஏற்க மறுக்கிறாய், நீ, ஏற்றுக் கொள்ளாததால் மன குழப்பத்தில் இருக்கிறேன். என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் மாமா'' என எழுதி இருந்தார்.

இதற்கிடையே காதலித்த வாலிபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் ஆனதாக கூறப்படுகிறது. இதனால் காதலரை திருமணம் செய்ய முடியவில்லையே எனவும், சேர்ந்து வாழ முடியாததால் இந்த முடிவை எடுக்கிறேன் எனவும் அந்த கடிதத்தில் மாணவி நிவேதா உருக்கமாக எழுதி உள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

மாணவி நிவேதா பயன்படுத்தி வந்த செல்போனை அறையில் இருந்து போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த செல்போனை தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக சுவிட்ச்-ஆப் செய்துள்ளார். எனவே, சம்பவத்தன்று அவரது செல்போனுக்கு யார்? யார்? தொடர்பு கொண்டு பேசினார்கள்? என்பது குறித்தும், மாணவி  கடைசியாக யாரிடம்  பேசினார்? என்பது குறித்தும் சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வுக்குப்பின், என்ன? என்ன? பேசினார்கள் என முழுவிபரங்களும் தெரியவரும். அதன் பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மாணவி நிவேதா காதலித்து வந்த அந்த வாலிபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. அவரை பற்றி கருப்பூர் போலீஸ் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் அங்கப்பன் விசாரித்து வருகிறார்.

சேலம் அரசு ஆஸ்பத் திரியில் நேற்று மாணவி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர்  பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மாணவியின் உடலை பெற்றோர், தர்மபுரிக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.
Tags:    

Similar News