ஆன்மிகம்
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்

Published On 2021-01-28 08:22 GMT   |   Update On 2021-01-28 08:22 GMT
மருதமலை சுப்பிரமணிய சுவாமிக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு மகா தீபாராதணை காட்டப்பட்டது. கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தைப்பூசத்தையொட்டி மருதமலை முருகன் கோவிலில் கடந்த 21-ந் தேதி இரவு வாஸ்து பூஜை மற்றும் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் காலை, மாலை யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக தேரோட்டம் நடத்தவும், முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கவும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை. தைப்பூசத்தை கொண்டாட நேற்று முதலே பக்தர்கள் அதிகளவில் மருதமலைக்கு படையெடுத்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு 8 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அனுமதியில்லை.

தைப்பூசமான இன்று அதிகாலை 3 மணிக்கு கோபூஜையுடன் நடைதிறக்கப்பட்டு பின்னர் விநாயகர் பூஜை நடந்தது. தொடர்ந்து சுப்பிரமணியசுவாமிக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு மகா தீபாராதணை காட்டப்பட்டது. இதையடுத்து 4 மணிக்கு யாக குண்டம் வளர்த்து வள்ளி தெய்வானையுடன் மூலவருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதில் சுப்பிரமணியசுவாமிக்கு வலப்புறத்தில் வள்ளி பச்சை பட்டுடுத்தியும், இடபுறத்தில் தெய்வானை நீல பட்டுடுத்தியும் காட்சி அளித்தனர். தொடர்ந்து மொய்காணிக்கை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் முருகனுக்கு உகந்த உரல் இடிக்கப்பட்டு பொற்சின்னபாடல் பாடப்பட்டு மேளதாளம் இசையுடன் திருக்கல்யாணம் நடந்து முடிந்தது. இதையடுத்து வள்ளி தெய்வானையுடன் வெள்ளை யானையில் மூலவர் வீதி உலா வந்து முத்தங்கி அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

காலை 7 மணிக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் இரவு ரோட்டோரத்திலும், பாரதியார் பல்கலைகழகம் அருகே தங்கியும் இன்று சாமியை தரிசித்து சென்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தினர் மூலம் போக்குவரத்து வசதி செய்யப்பட்டது. கூட்ட நெரிசலை தடுக்க தரிசன வரிசை 3 ஆக பிரிக்கப்பட்டு பொதுவழி, சிறப்பு தரிசனம், வி.ஐ.பி.தரிசனம் என தடுப்புகள் அமைத்து அனுமதிக்கப்பட்டனர். கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

காங்கயம் அடுத்த சிவன்மலை முருகன் கோவில் இன்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெபற்றது. தொடர்ந்து காலை 7 மணியளவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து தேர் கோவிலை சுற்றி கிரிவலம் நடக்கிறது. இன்று இரவு 7 மணிளவில் கிரிவலம் அனைத்தும் முடிந்து தேர் நிலையை அடைகிறது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிவன்மலை முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரி முல்லை செய்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ்.என் நடராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் வெங்குமணிமாறன், காங்கயம் பஞ்சாயத்து சேர்மன் மகேஷ்குமார், சிவன்மலை தைப்பூச திருவிழா சுங்கம் குரூப் நிர்வாகிகள் சுகுமாறன், சிந்து, கங்கை முத்து, குண்டடம் அரிமா சங்க தலைவர் டாக்டர் செல்வகுமார், வாஸ்து நிபுணர் ஊதியூர் பழனிசாமி, நகராட்சி முன்னாள் துணை தலைவர் வைஸ் கந்தசாமி, சித்த வைத்திய தணிகாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News