செய்திகள்
முககவசம்

தமிழகத்தில் தினமும் ரூ.40 கோடிக்கு ‘முககவசம்’ விற்பனை

Published On 2021-04-13 06:12 GMT   |   Update On 2021-04-13 06:12 GMT
முன்னணி ஜவுளி உற்பத்தி நிறுவனங்களும் முககவசம் தயாரிப்பில் இறங்கி உள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் முககவசங்களை வாங்கி அணியும் பழக்கம் குறைந்து வருகிறது.
சென்னை:

கொரோனாவை அண்ட விடாமல் பாதுகாக்க முக கவசம் அவசியமாகிவிட்டது. அதிலும் 2-வது அலை வீரியத்துடன் வேகமாக பரவி வருவதால் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் முககவசம் அணிபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முககவசத்தின் தேவை அதிகரித்து வருவதால் முக கவசம் தயாரிப்பு தொழிலும் மும்முரமாக நடக்கிறது.

பொதுவாக முககவசம் 3 முதல் 5 அடுக்குகளை கொண்டதாக இருக்க வேண்டும். அதில் நடுவில் இருக்கும் ‘லேயர்’ கொரோனா வைரசை வடிகட்டும். அதாவது அணிந்துள்ளவரிடம் இருந்து கொரோனா வைரஸ் அடுத்தவருக்கும் பரவாது. அடுத்தவர்களிடம் இருந்து முககவசம் அணிந்து இருப்பவரின் மூக்கு, வாய் வழியாக செல்லவும் முடியாது. முககவசத்தின் நடுவில் இருக்கும் லேயரில் வைரஸ்கள் வடிகட்டப்படுகிறது.



மிகப்பெரிய பாதுகாப்பு கவசமாக இருக்கும் இந்த முககவசத்தை பயன்படுத்தும்போது முறையாக பயன்படுத்தினால் மட்டுமே பலன் உண்டு. அதாவது முககவசத்தை அணிந்த பிறகு அதை அடிக்கடி கைகளால் தொடுவது, கழட்டி சட்டை பையிலோ, பேக்கிலோ வைத்துவிட்டு மீண்டும் பயன்படுத்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் அந்த முககவசத்தில் தங்கி இருக்கும் வைரஸ் கைகளிலோ சட்டை பை மற்றும் பேக்கிலோ ஒட்டிக்கொள்ள வாய்ப்பு உண்டு. எனவே முககவசத்தை ஒருமுறை பயன்படுத்திவிட்டு அழிப்பதே நல்லது. மீண்டும் பயன்படுத்தும் மாஸ்க்குகளை கழட்டி கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து கிருமிநாசினியால் சுத்தப்படுத்தி பயன்படுத்த வேண்டும்.

ஆனால் நடவடிக்கைகளுக்கு பயந்து, ஏதோ ஒரு முககவசம் அணிய வேண்டும் என்பதற்காக பெரும்பாலும் துணியால் ஆன முககவசங்களை அணிகிறார்கள். இதற்காக தெருத்தெருவாக முக கவசம் விற்பனைக்கும் வந்துவிட்டது. அவை ரூ.10 முதல் ரூ.25 வரை விற்கப்படுகிறது. இந்த மாதிரியான காட்டன் துணியால் முக கவசம் தயாரிப்பது குடிசை தொழிலாக மாறி இருக்கிறது.

முன்னணி ஜவுளி உற்பத்தி நிறுவனங்களும் முககவசம் தயாரிப்பில் இறங்கி உள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் முககவசங்களை வாங்கி அணியும் பழக்கம் குறைந்து வருகிறது. ஏனெனில் தினமும் ரூ.5 முதல் ரூ.10 வரை செலவாகிறது என்பதால் அந்தமாதிரி முககவசத்தை வாங்கி பயன்படுத்த தயங்குகிறார்கள்.

ஆனால் ஆஸ்பத்திரிகள், சுகாதார பணிகளில் ஈடுபடுபவர்கள் ஒருமுறை பயன்படுத்தும் முககவசத்தையே பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் சுமார் 10 லட்சம் முககவசங்கள் விற்பனையாகிறது. சுமார் ரூ.40 கோடி வரை வியாபாரம் நடப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

‘நோஸ்பின்’னுடன் கூடிய 3 முதல் 5 அடுக்கு வரை உடைய முககவசங்கள் மொத்த விலைக்கு ரூ.2 முதல் ரூ.3½ வரை விற்கப்படுகிறது. இதுவே சில்லரை விலைக்கு ஒரு மாஸ்கின் விலை ரூ.10 வரை விற்பனையாகிறது.

இவை தவிர ஆன்-லைனிலும் பல ரகங்களில் முக கவசங்கள் விற்பனைக்கு வந்திருக்கிறது. ஒருமுறை பயன்படுத்தும் முககவசங்கள் ஒரு பண்டல் ரூ.299 முதல் 569 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுதவிர என்-95 மற்றும் காட்டன் துணியால் ஆன முககவசங்களும் பல வண்ணங்களில் பல வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆன்-லைன் விற்பனை, மருத்துவ துறை பயன்பாடு, பொதுமக்கள் வாங்குவது ஆகியவை சேர்ந்து சுமார் 40 கோடி ரூபாய் விற்பனை நடப்பதாக கூறுகிறார்கள்.
Tags:    

Similar News