செய்திகள்
கோப்புபடம்

ஊரப்பாக்கம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தீக்குளிப்பு

Published On 2021-09-17 11:40 GMT   |   Update On 2021-09-17 11:40 GMT
ஊரப்பாக்கம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தீக்குளித்தார். அவர் உடல் கருகிய நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே அய்யஞ்சேரி பிள்ளையார் கோவில் முதல் தெருவை சேர்ந்தவர் கமலதாஸ். இவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஒரு பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஸ்ரீபா. அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர்களது மகள் அனு (வயது 17). இவர் பிளஸ்-2 முடித்த நிலையில் கடந்த 12-ந் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ஆவடியில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் எழுதினார்.

இந்த நிலையில் நேற்று பெற்றோர் வீட்டில் இல்லாதபோது நீட் தேர்வில் எங்கு தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில் மாணவி அனு தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அக்கம்பக்கத்தில் விசாரித்தனர். மேலும் இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நீட் தேர்வு எழுதிய மாணவி அனு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த சம்பவம் அய்யஞ்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீட் தேர்வு பயத்தில் இந்த ஆண்டு சேலம் மாணவர் தனுஷ், அரியலூர் கனிமொழி, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சவுந்தர்யா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News