செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையை மீறியதாக வழக்கு : இந்தோனேசிய நாட்டினர் உள்பட 10 பேர் விடுதலை

Published On 2020-10-01 23:12 GMT   |   Update On 2020-10-01 23:12 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கையை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்தோனேசிய நாட்டினர் உள்பட 10 பேரை விடுதலை செய்து ராமநாதபுரம் கோர்ட்டு உத்தரவிட்டது.
ராமநாதபுரம்:

இந்தோனேசியா நாட்டிலிருந்து சைலானி (வயது42), இவரின் மனைவி சித்தி ரோகனா (41), ரமலான் பின் இப்ராகிம் (47), அவரின் மனைவி அமன் ஜக்காரியா (50), முகமது நசீர் இப்ராகிம் (50), இவரின் மனைவி கமரியா (50), மரியோனா (42), இவரின் மனைவி சுமிஸ்னி (43) ஆகிய 8 பேர் கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி விமானம் மூலம் டெல்லி வந்து அங்கு நடைபெற்ற தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர் அவர்கள் மதுரை வந்து அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்றுவிட்டு மார்ச் 24-ந் தேதி ராமநாதபுரம் வந்தனர். இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மத பரப்புரை மேற்கொண்டு வந்தனர். இந்தோனேசியா நாட்டை சேர்ந்த மேற்கண்ட 8 பேரும் சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்து விசா விதிமுறைகளை மீறி, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை மீறி ராமநாதபுரம் பாரதிநகர் பள்ளிவாசலில் குழுவாக தங்கியிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் இக்பால் தெருவை சேர்ந்த மூமின் அலி (43), ராமநாதபுரம் பாரதிநகர் வள்ளலார் தெருவை சேர்ந்த அசரப் அலி (38) ஆகியோர் உதவியாக இருந்தார்களாம். இதுகுறித்து பட்டணம்காத்தான் கிராம நிர்வாக அலுவலர் செல்வம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் இந்தோனேசியா நாட்டை சேர்ந்த 8 பேர் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த 2 பேர் உள்பட 10 பேர் மீது பாஸ்போர்ட் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் 2-வது கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன் மேற்கண்ட 10 பேரையும் அவர்கள் சிறையில் இருந்த காலத்தை தண்டனை காலமாக கருதி விடுதலை செய்து உத்தரவிட்டார். இதில், அவர்களுக்கு உதவி செய்த மூமின்அலி மற்றும் அசரப்அலி ஆகியோருக்கு மட்டும் தலா ரூ.7 ஆயிரம் அபராதமும், அசரப்அலி கோர்ட்டு கலையும் வரையில் கோர்ட்டுக்குள் இருக்கவும் உத்தரவிட்டார்.

விடுதலை செய்யப்பட்ட இந்தோனேசிய நாட்டினை சேர்ந்த 8 பேரையும் சென்னையில் அவர்கள் தங்கியிருந்த முகாமிற்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Tags:    

Similar News