ஆன்மிகம்
சாய்பாபா

வீட்டில் குடியேறிய யோக சாய்பாபா

Published On 2019-11-10 05:15 GMT   |   Update On 2019-11-10 05:15 GMT
கொப்பனாபட்டியில் சாய்பாபா யோக சத்குரு சாய் பாபாவாக அருள்பாலிக்கிறார். இங்கு இவர் தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கொப்பனாபட்டி என்ற இயற்கை எழில் சூழ்ந்த கிராமம். இந்த ஊரை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் 45 ஆண்டுகளாக மதுரையில் மருந்துக் கடை நடத்தி வயிற்றை கழுவி வந்தவர்கள்தான் திருநாவுக்கரசர்- முத்தாத்தாள் தம்பதியினர். முத்துராமன் என்ற மகனும், கவிதா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.

அப்பகுதி மக்களிடையே சாய்-அம்மா என்று அறிமுகமான திருநாவுக்கரசர்- முத்தாத்தாள் தம்பதியினர் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர்கள். குறிப்பாக சாய்பாபா மீது அளவற்ற அன்பும், ஈடுபாடும் கொண்டுள்ளனர்.

ஒரு முறை சீரடி செல்லக் கூடிய பாக்கியத்தை பெற்ற முத்தாத்தாள் சாய்பாபா ஜீவ சமாதி அடைந்த சீரடிக்கு சென்று சாய் பாபாவை தரிசனம் செய்து பிரசாதம் பெற்று வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு இருந்த மரத்தின் நிழலில் முத்தாத்தாள் நின்றார். அப்போது நொடிப்பொழுதில் மகான் சத்குரு ஸ்ரீசாய்நாத் பகவான் காட்சியளித்து முத்தாத்தாளிடம் இருந்த பிரசாதத்தை முழுமையாக வாங்கி சாப்பிட்டுவிட்டு மறைந்துள்ளார். மெய்சிலிர்த்து போன முத்தாத்தாள் கண்கள் கலங்கியபடி தனது தோழிகளிடம் கூற, அவர்களும் யாரோ தற்போது வந்து மறைந்து போனதை பார்த்ததாகவும், அந்நிற உடையை யாரும் இங்கு அணிய வில்லை எங்களுக்கும் மெய்சிலிர்த்தது என்று கூறி நெகிழ்ச்சியடைந்தனர்.

அந்த நாள் முதல் வாழ்வின் ஒவ்வொரு செயலையும் பாபாவிற்கு அர்ப்பணித்து தொடர் முயற்சியுடன் பாபா மீது தீராத அன்பும் மாறாப் பற்றும் கொண்டு பூஜித்து வந்த தம்பதியர் வாழ்வில் பல மாற்றங்களையும் ஏற்றங்களையும் கண்டனர். சொந்த ஊரான கொப்பனாபட்டியில் தனது பூர்வீக சொத்தில் இவருக்கென இருந்த வீட்டில் பாபா விக்கிரகம் வைத்து ஆரம்பத்தில் வழிபாடு செய்தனர். பலருக்கு அங்கு அன்னதானமும் வழங்கினர்.

முன்னதாக தனது பூர்வீக வீட்டின் முன்பு பயனுள்ள செடிகளான எலுமிச்சை, வாழை போன்ற மரங்களை வளர்த்து வந்துள்ளனர். அதில் தனது பேரன்கள் இருவருக்கும் வீடு கட்டுவோம் என திரு நாவுக்கரசு குடும்பத்தினர் தீர்மானித்து அதற்காக அவ்விடத்தை சுத்தம் செய்துள்ளனர். அப்போது இரண்டு வாழை மரங்கள் மட்டும் தார் விடாமல் இருந்துள்ளது. இப்பகுதியில் தார் விடாத வாழை மரத்தை வெட்டுவது இல்லை. அதற்காக இரு வாழை மரங்களையும் அப்படியே விட்டுவிட்டனர். அந்த வாழைமரங்கள் தார் விட்ட நிலையில் அதன் நடுவேதான் சாய்பாபாவின் திருவுருவச்சிலை அமைந்திருந்தது.

தனது ஆரம்ப கட்ட காலத்திலேயே தங்களது மனதில் சொந்தமாக கோவில் ஒன்றை கட்ட வேண்டும் என்ற எண்ணங்களை அடி மனதில் வைத்திருந்த திருநாவுக்கரசு- முத்தாத்தாள் தம்பதியினருக்கு ஒரு கட்டத்தில் சித்தர் சொன்னதையடுத்து பல இடங்களில் அருள் வாக்கு கேட்டு கோவில் கட்டுவது என தீர்மானித்துள்ளார். ஆனால் அந்த சித்தர் இந்த இடம் ஐந்து தலைமுறைக்கு முன்பு சிவனடியார்கள் வாழ்ந்த இடம், இங்கு சிவனடியார்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்விடத்தில் சித்தர் சிவன் மகானாக கோவில் கொண்டு குடியேறுவார் என தெரிவித்து சென்றிருந்தார்.

வேறு எங்காவது இடம் வாங்கி அவ்விடத்தில் கோவில் கட்டுவோம் என முடிவெடுத்து முயற்சி செய்தனர். ஆனால் அச்செயல் கைகூடி வர வில்லை. அப்போதுதான் எதிர்பாராதவிதமாக தங்களது மகன் முத்துராமன் பணி நிமித்தமாக புதுக்கோட்டையில் இருந்து கொப்பனாபட்டியில் உள்ள வீட்டிற்கு வந்தபோது நாய் ஒன்று குறுக்கே வந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் தனது மகன் பிழைத்ததே மறுபிறவி, அனைத்தும் சாயி அருள் என்கிறார் முத்தாத்தாள்.
தாம் வறுமையில் வாழ்ந்த காலத்தில் தனது குடும்பம் பொருளாதார நிலையிலிருந்து உயர்வு பெற, தனது வாழ்வில் நிகழ்ந்த அடுத்தடுத்த மாற்றங்களுக்கு காரணமாகவும் மனதில் நிறைந்த இஷ்ட தெய்வமான சீரடி சாய்பாபாவின் சிலையை தனது வீட்டில் வைத்து வழிபட்டு வருவதை தொடர்ந்து அங்கேயே கோவில் கட்ட முடிவு செய்து பணியை தொடங்கினர்.

மதுரையில் வீடு கட்ட ஆரம்பித்த பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில், கோவில் கட்டும் பணி எந்தவித தடையும் இன்றி மளமளவென முடிந்து 2014 -ம் ஆண்டு பொன்னமராவதி சுற்று வட்டார பகுதியில் முதல் சாய்பாபா கோவிலாக உருவெடுத்தது. வீட்டையே கோவிலாக மாற்றிய தம்பதியினர் சாய்பாபாவின் பெரிய சிலை வைக்க விரும்பினர். பின்னர் ராஜஸ்தானில் இருந்து ரூ.3 1/2 லட்சத்தில் சிலை வாங்க தீர்மானித்து 50 ஆயிரத்தை முன்பணமாக செலுத்தினர். அதிலிருந்து 9-வது நாளில் கொப்பனாபட்டிக்கு சாய்பாபா வந்திறங்கினார். அவரே இன்று யோக சத்குரு சாய் பாபாவாக அருள்பாலிக்கிறார். ராஜஸ்தானில் இருந்து புறப்பட்டபோது, சிலை அமைத்தவர்கள் இவர் செல்லும் இடம் யோகமாகும் என்று கூறி அனுப்பி வைத்தனர்.

ஆனந்தக் கண்ணீருடன் சாய்பாபா திருவுருவச் சிலையை வரவேற்று மகிழ்ந்த முத்தம்மாள் திருநாவுக்கரசு தம்பதியினர் தொடர் பூஜை, புனஸ்காரங்கள் என சாய்பாபாவிற்கு செய்த போதிலும் ஏதோ ஒரு குறை இருப்பதை உணர்ந்தனர். ஏற்கனவே சித்தர் கூறியது நினைவில் வந்தது. மேலும் கனவில் தோன்றிய சாய்பகவான், இவ்விடத்தில் ஆவுடையார் குடியேறுவார் என தெரிவிக்க ஆவுடையார் என்றாலே என்னவென்று தெரியாமல் இருந்த முத்தாத்தாள், சிவன் மீது லிங்கத்திற்கு பதிலாக சாய் உருவம் இருக்க வேண்டும் என்பதை அறிந்தார். சித்தர் ஒருவர் சொன்னதை போல் சித்தர் சிவன் மகனாக இங்கே காட்சியளிக்கிறார் சீரடி யோக சாய் பகவான்.

நாள்தோறும் நான்கு வேளை பூஜை செய்யப்படுகிறது. வியாழன் தோறும் மதியம் மற்றும் இரவில் அன்னதானம் வழங்கப்படுகிறது. நன் கொடையாளர்கள் பணமாகவோ பொருளாகவோ தருகிறார்கள். ஐம்பதிலிருந்து நூறு பேருக்கு அன்னதானம் வழங்குகிறோம். யோக சத்குரு சாய்பாபா மட்டுமின்றி இவ்விடத்தில் சாய் விநாயகர், துவ ராமாயி, பல்லக்கு பாபா, சத்திய நாராயண மகாலட்சுமி, அபிஷேக பாபா என அனைவருக்கும் ஆரத்தி அளிக்கப்பட்டு நெய்வேத்தியம் செய்யப்படுகிறது.

மாதந்தோறும் பவுர்ணமி பூஜையன்று சத்திய நாராயண மகாலட்சுமி விளக்கு பூஜை வழிபாடு பெண்களால் நடத்தப்படுகிறது. பல்லாக்கு பாபாவிற்கு ஆண்டிற்கு மூன்று முறை பல்லக்கு ஊர்வலம் நடக்கிறது. சத்குரு ஸ்ரீ சாய்பாபா சீரடி ஜீவசமாதியான விஜயதசமி, ஆவணி குரு பவுர்ணமி, ராம நவமி அன்றும் ஏப்ரல் 8-ந்தேதி வருடாபிஷேகம் அன்றும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு பாபாவை நகர் வலம் வருவது வழக்கம் என்கிறார் முத்தாத்தாள். பொன்னமராவதி சுற்று வட்டார பகுதியிலே தனது வீட்டையே கோவிலாக மாற்றி தம்பதியர் திருநாவுக்கரசர் முத்தாத்தாள் இருவரும் விருப்ப தொண்டாற்றினர்.

குழந்தை வரம்

கொப்பனாபட்டி பகுதியில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வரும் கூலித்தொழிலாளி ஒருவருக்கு கடந்த 14 ஆண்டுகளாக திருமணமாகி குழந்தை ஒன்று இல்லாத சூழ்நிலை இருந்து வந்துள்ளது. பாபாவுக்கு கோவில் வந்ததும் அங்கு அக்குடும்பத்தினர் சென்று தொடர் வேண்டுதலை நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தனர். இரண்டே மாதத்தில் கருவுற்று அழகிய பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

சாய் மாலை அணிந்து விபூதியை பூசிக்கொள்

கடந்த செப்டம்பர் மாதம் 13-ந்தேதி காலை முத்தாத்தாள் கணவர் திருநாவுகரசு காலை 5.05 மணியளவில் பிரம்ம முகூர்த்தத்தில் இயற்கை எய்தினார். அந்நிகழ்வு குறித்து முத்தாத்தாள் நம்மிடம் கூறும் போது, திருநாவுக்கரசு மறைவிற்கு முன் 2 நாட்கள் மதுரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில் எந்த ஒரு செயல் ஆனாலும் அதில் சாய் பகவானின் உத்தரவு எனக்கு கிடைக்கும். ஆனால் எனது கணவர் உடல்நிலையில் சாய் பகவானின் உத்தரவு நல்ல விதமாக கிடைக்கவில்லை.

தொடர்ந்து சிகிச்சையில் மதுரையில் இருந்தபோது உடனடியாக கொப்பனாபட்டி வரச்சொல்லி சாய் சத்குரு சாய்பாபாவின் உத்தரவாக எனக்கு கிடைத்தது. அதன் பின் இங்கு வந்து அதிகாலை 4.50 மணிக்கு திடீரென நான் கண் விழித்தேன். யாரோ சாய் மாலையை அணிந்து விபூதியைப் பூசிக்கொள் என கேட்க கண்கலங்கியபடி ஏற்றுக் கொண்டேன். சரியாக ஐந்து மணி ஐந்து நிமிடத்தில் எனது கணவரின் உடலிலிருந்து ஆன்மா பிரிந்தது என்றார்.

தொடர்புக்கு:

முத்தாத்தாள்,
ஓம் ஸ்ரீ சீரடி யோக சாய்பாபா ஆன்மீக மற்றும் தர்மக்கோவில்,
கொப்பனாபட்டி,
பொன்னமராவதி தாலுகா,
புதுக்கோட்டை மாவட்டம். 97897 78770.

Tags:    

Similar News