செய்திகள்
பெங்களூரு

பெங்களூரை அதிர வைத்த மர்ம சத்தம்... அதிர்ச்சியில் மக்கள்

Published On 2020-05-20 11:59 GMT   |   Update On 2020-05-21 04:07 GMT
பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் கேட்கப்பட்ட மர்மமான பயங்கர சத்தத்தால் மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.
பெங்களூரு:

கொரோனா வைரஸ் ஒரு பக்கம், அம்பன் புயல் ஒரு பக்கம் என மக்கள் பல்வேறு பிரச்சனைகளால்  மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர். 

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் 1 மணியளவில் பயங்கர சத்தம் கேட்டது. இந்த பயங்கர இரைச்சல் மிகுந்த அந்த சத்தத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

மக்கள் யாரும் இதுவரை கேட்டிராத வகையிலான அந்த மர்ம சத்தம் பல முறை ஒலித்தது. இந்த பயங்கர சத்தத்தால் வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் அதிர்ந்தன. 

இடி இடித்தால், வெடிகுண்டு வெடித்தால் ஏற்படும் சத்தம் போன்றும் நிலநடுக்கத்தால் ஏற்படும் சத்தம் போன்றும் அந்த ஒலி இருந்தது.

போர் விமானங்கள் குறிப்பாக மிராஜ் ரக விமானங்கள் பறந்தால் ஏற்படும் சோனிக் பூம் என்ற சத்தம் போன்று இது உணரப்பட்டது. ஆனால், அந்த நேரத்தில் எந்த போர் விமானங்களும் வானில் பறக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.  

இதற்கிடையில், அம்பன் புயலால் ஏற்பட்ட வளிமண்டல் வெடிப்பு காரணமாக இந்த பயங்கர சத்தம் எதிரொலித்திருக்கலாம் என வானிலை மைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், பெங்களூரில் இன்று ஏற்பட்ட பயங்கர சத்தம் தொடர்பாக விசாரணை நடத்த அவசியம் ஏற்பட்டுள்ளதாக கர்நாடக மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் இன்று ஒலித்த பெரும் சத்தத்தால் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.  
Tags:    

Similar News