இந்தியா
மாநிலங்களவை

நீதிபதிகளின் ஓய்வூதிய உயர்வு மசோதாவுக்கு மாநிலங்களவை ஒப்புதல்- மீண்டும் மக்களவைக்கு சென்றது

Published On 2021-12-13 17:12 GMT   |   Update On 2021-12-13 17:12 GMT
விவாதத்திறகு பதிலளித்து பேசிய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு, இந்த விஷயத்தில் அரசியலுக்கு இடமில்லை என்றும், நீதியை உறுதி செய்யும் விஷயத்தில் அனைவரும் ஒன்றாக நிற்பதாகவும் கூறினார்.
புதுடெல்லி:

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்  நீதிமன்ற நீதிபதிகளுக்கான சம்பள உயர்வு தொடர்பான சட்டத்திருத்த மசோதா கடந்த 8ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில், இந்த சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்திற்கான தகுதி வயது குறித்து விளக்கமளிக்கும் வகையில் இந்த மசோதா உள்ளது.

மசோதாவை தாக்கல் செய்து பேசிய சட்டத்துறை மந்திரி, இது மிகவும் வரையறுக்கப்பட்ட திருத்தம். இது நீதிபதிகளின் சம்பளத்தில் எந்த வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை. இது உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் ஓய்வுபெற்ற நீதிபதிகளின் ஓய்வூதிய உயர்வுடன் மட்டுமே தொடர்புடையது, என்றார். 

அதன்பின்னர் மசோதா மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்திறகு பதிலளித்து பேசிய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு, இந்த விஷயத்தில் அரசியலுக்கு இடமில்லை என்றும், நீதியை உறுதி செய்யும் விஷயத்தில் அனைவரும் ஒன்றாக நிற்பதாகவும் கூறினார். சாமானியர்களுக்கும், நீதி அமைப்புக்கும் இடையே இடைவெளி இருக்கக் கூடாது, எந்த அரசியலையும் கொண்டு வராமல் மசோதாவை ஆதரித்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

விவாதத்திற்கு பிறகு, மசோதாவுக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்தது. அத்துடன், இது  நிதி மசோதாவாக இருப்பதால், மசோதா மக்களவைக்கு திருப்பி அனுப்பப்பட்டது. 
Tags:    

Similar News