செய்திகள்
கோப்புப்படம்

ஆயுத பூஜையையொட்டி ஒரேநாளில் ரூ.6½ கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

Published On 2020-10-27 10:20 GMT   |   Update On 2020-10-27 10:20 GMT
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஆயுத பூஜையையொட்டி ஒரேநாளில் ரூ.6 கோடியே 61 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் டாஸ்மாக் வசதிக்காக வேலூர், அரக்கோணம் ஆகிய 2 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. வேலூர் கோட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களும், அரக்கோணம் கோட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டமும் அடங்கி உள்ளன. வேலூர் கோட்டத்தில் 110 டாஸ்மாக் கடைகளும், அரக்கோணம் கோட்டத்தில் 88 டாஸ்மாக் கடைகளும் உள்ளன.

தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை உள்ளிட்ட விசேஷ நாட்களில் டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தைவிட அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகும். ஆயுத பூஜை நேற்று முன்தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக பீர் மற்றும் மதுவகைகள் வரவழைக்கப்பட்டன.

ஆயுத பூஜையையொட்டி கடந்த 24-ந்தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆயுத பூஜையை நண்பர்களுடன் சந்தோஷமாக கொண்டாட பலர் தங்களுக்கு விருப்பமான மதுபானங்களை வாங்கி உற்சாகத்துடன் சென்றனர். இதன் காரணமாக வேலூர் டாஸ்மாக் கோட்டத்தில் வழக்கமாக விற்பனையாகும் மதுபானங்களைவிட ரூ.1 கோடி மதுபானங்கள் அதிகமாக விற்பனையானது.

நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டும் ரூ.4 கோடியே 11 லட்சம் மதுபானங்கள் விற்பனையாகின. வழக்கமாக மற்ற நாட்களில் ரூ.2¾ முதல் ரூ.3 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகும்.

அரக்கோணம் டாஸ்மாக் கோட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.2½ கோடி மதுபானங்கள் விற்பனையானது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.6 கோடியே 61 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News