செய்திகள்
கோப்புப்படம்.

திருமூர்த்திமலையில் அணைப்பூங்கா அமைக்க அதிகாரிகள் குழு ஆய்வு

Published On 2021-07-18 08:51 GMT   |   Update On 2021-07-18 08:51 GMT
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அணைக்கரையில் பூங்கா அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
உடுமலை:

உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் திருமூர்த்தி மலை அமைந்துள்ளது.

மலைமேல் 960 மீட்டர் உயரத்தில் மூலிகை குணம் நிறைந்த பஞ்சலிங்கம் அருவி, மலையடிவாரத்தில் பாலாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளும் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை பூங்கா படகு இல்லம், நீச்சல் குளம், வண்ண மீன் காட்சியகம், விளையாட்டுப் பூங்கா என பல்வேறு அம்சங்கள் உள்ளன.

இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அணைக்கரையில் பூங்கா அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,அணைப்பூங்கா அமைப்பது குறித்து திருப்பூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார், திருமூர்த்தி கோட்ட செயற்பொறியாளர் கோபி மற்றும் உதவிப்பொறியாளர் சண்முகம், உதவி சுற்றுலா அலுவலர் செல்வராஜ், சுற்றுலா ஆர்வலர்கள் சண்முகராஜ், ஜவஹர், பிரசாந்த், பாலாஜி, பொன்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர்  ஆய்வு செய்தனர்.

இது பற்றி மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் கூறியதாவது:-

திருமூர்த்தி அணைப் பகுதியை ஒட்டிய 2,700 மீட்டர் நீளம் கொண்ட பொதுப்பணித்துறை நிலத்தில்  அணை பூங்கா கட்டுவதற்கான திட்ட கருத்துரு செயல்படுத்தப்படாமல் உள்ளது.

இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்தும் வகையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகளும் விரைவில் ஆய்வு செய்ய உள்ளனர்.

அரசின் கவனத்திற்கு இந்த திட்டம் கொண்டு செல்லப்பட்டு, நிதி பெற்று அழகிய அணைப்பூங்கா விரைவில் அமைக்க சுற்றுலாத்துறை வாயிலாக  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Tags:    

Similar News