செய்திகள்
டி.கே.சிவக்குமார்

வருகிற 10-ந் தேதி மண்டியாவில் விவசாயிகள் மாநாடு: டி.கே.சிவக்குமார்

Published On 2020-10-07 03:12 GMT   |   Update On 2020-10-07 03:12 GMT
மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டங்களை கண்டித்து வருகிற 10-ந் தேதி மண்டியாவில் மாநில விவசாயிகள் மாநாடு நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூரு :

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உத்தரவுப்படி கர்நாடக காங்கிரஸ் சார்பில் மாநில விவசாயிகள் மாநாட்டை தாவணகெரேயில் நடத்த முடிவு செய்திருந்தோம். ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால், அந்த மாநாட்டை வருகிற 10-ந் தேதி மண்டியாவில் நடத்த முடிவு செய்துள்ளோம். ஏற்கனவே மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களை கண்டித்து போராட்டங்களை நடத்தியுள்ளோம். விவசாயிகள் மாநாடு, கட்சி சார்பற்றது. இந்த மாநாட்டில் விவசாயிகள் சங்கத்தினர் 6 பேருக்கு பேச வாய்ப்பு அளிக்கிறோம்.

மத்திய அரசின் விவசாயிகள் விரோத சட்டங்களை கண்டித்து நாடு முழுவதும் கையெழுத்து இயக்கத்தை காங்கிரஸ் தொடங்கியுள்ளது. கர்நாடகத்தில் 2 கோடி பேரிடம் கையெழுத்து பெற முயற்சி மேற்கொண்டுள்ளோம். இந்த கையெழுத்து அடங்கிய தொகுப்பை அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியிடம் வழங்குவோம். அவர் ஜனாதிபதியிடம் வழங்குவார். மத்திய அரசின் இந்த சட்டங்களை கண்டித்து அகாலிதளம் கட்சியை சேர்ந்த மத்திய மந்திரி ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். அவரது முடிவை நாங்கள் வரவேற்கிறோம்.

சி.பி.ஐ. அதிகாரிகள் எங்களது வீடுகளில் சோதனை செய்தனர். இதில் டி.கே.சுரேசின் வீட்டில் ரூ.1½ லட்சம், அதே நகரில் உள்ள எனது வீட்டில் ரூ.1.77 லட்சம், எனது அலுவலகத்தில் ரூ.3½ லட்சத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மும்பையில் உள்ள எனது வீட்டில் எதுவும் இல்லை. நான் அங்கு சென்று 6 ஆண்டுகள் ஆகிறது. எனது தாயார் வீட்டிலும் ஒன்றும் கிடைக்கவில்லை. எனது நண்பர் சசின் நாராயண் வீட்டில் ரூ.50 லட்சம் கிடைத்துள்ளது.

மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி பெரிய தலைவர். அவர் எனது சொத்து விவரங்களை கேட்டுள்ளார். அவர் முதலில் தனது கட்சி தலைவர்களின் சொத்துகள் குறித்து கூற வேண்டும். எனது வீட்டில் நடந்த சி.பி.ஐ. சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதை, எப்.ஐ.ஆர்.-ஐ பார்த்தாலே தெரியும். நான் கட்சி தலைவராக பொறுப்பேற்றது எப்போது, அந்த வழக்குப்பதிவு செய்தது எப்போது என்பதை பார்த்தாலே தெளிவாக புரியும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Tags:    

Similar News