ஆன்மிகம்
விநாயகர்

பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர்....

Published On 2020-08-25 06:15 GMT   |   Update On 2020-08-25 06:15 GMT
ஏகதந்தா, கணேஷா, விநாயகா, கணபதி, வேழமுகத்தோன் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகரைத் தொழுது தொடங்கும் எந்த ஒரு செயலும் வெற்றியில் முடியும் என்பது நம்பிக்கை.
ஏகதந்தா, கணேஷா, விநாயகா, கணபதி, வேழமுகத்தோன் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகரைத் தொழுது தொடங்கும் எந்த ஒரு செயலும் வெற்றியில் முடியும் என்பது நம்பிக்கை.

கற்பக விநாயகர்:- சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூருக்கு அருகில் அமைந்திருக்கும் பிள்ளையார்பட்டியில் எழுந்தருளியிருக்கும் கற்பக விநாயகர் ஆலயமானது, குகைப்பாறையில் செதுக்கப்பட்டதாகும். விநாயகரின் தும்பிக்கையானது வலப்புறம் சுருண்டிருப்பதால் இவர் வலம்புரி விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார்.

ஆறு அடி உயரத்தில் செதுக்கப்பட்டு மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறார் பிள்ளையார்பட்டி விநாயகர். விநாயகர் சதுர்த்தி விழாவானது இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. கற்பக மரமானது வேண்டுவதை தருவதைப்போல இங்கிருக்கும் கற்பக விநாயகர் நாம் வேண்டும் வரங்களை தந்து அருள்வார் என்பது நம்பிக்கை.

முந்தி விநாயகர்:- கோவை மாநகரத்தில், புலியகுளம் என்ற இடத்தில் அமைந்திருக்கும் முந்தி விநாயகர் ஆசியாவிலேயே மிகப்பெரிய மூர்த்தியாவார். இருபது அடி உயரம், அதிக எடையுடன் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும் முந்தி விநாயகரை அலங்கரிக்க டன் கணக்கில் பூக்கள் தேவைப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தி விழாவானது இக்கோயிலில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பால், சந்தனம், பன்னீர், தயிர், மஞ்சள், இளநீர், வெண்ணெய், நெய் போன்ற பொருட்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மிகவும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் முந்தி விநாயகரைத் தரிசிக்க தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

ஸ்வேத விநாயகர்:- தஞ்சாவூர் மாவட்டத்தில், சுவாமிமலைக்கு அருகில் உள்ள கிராமமான திருவலஞ்சுழியில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற ஆலயம் வெள்ளை விநாயகர் என்று அழைக்கப்படும் ஸ்வேத விநாயகர் ஆலயமாகும்.

இங்கிருக்கும் விநாயகர் சிலையானது வெள்ளை நிறத்தில் இருக்கின்றது. தேவர்களின் தலைவனாகிய இந்திரன் பாற்கடலைத் கடைந்த போது உண்டான வெண்மை நிற கடல் நுரையால் உருவாக்கப்பட்டவரே இந்த வெள்ளை விநாயகராவார் என்று புராணங்கள் கூறுகின்றன.

இந்த விநாயகரின் தும்பிக்கையானது வலப்புறம் சுருண்டிருப்பதால், இந்த ஊரானது “திருவலஞ்சுழி” என்று பெயர் பெற்றது. ஸ்வேத விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரமானது செய்யப்படுவதில்லை. மிகவும் மென்மையான வெள்ளை நிறப்பொருளால் சிலையானது செய்யப்பட்டிருப்பதால் இங்கு, அபிஷேக, அலங்காரங்கள் தவிர்க்கப்படுகின்றன.

ஆதி விநாயகர்:- கூத்தனூருக்கு அருகில் உள்ள தில்தர்பணப்பூரி என்ற இடத்தில் அமைந்துள்ள முகத்தீஸ்வரர் ஆலயத்தில் மனித முகத்துடன் எழுந்தருளியிருப்பவரே ஆதி விநாயகராவார்.

பார்வதி தேவியால் மனிதமுகத்துடன் உருவாக்கப்பட்ட விநாயகர் இவரே என்றும், மனித முகத்துடன் காட்சி தரும் ஒரே விநாயகர் இவர் மட்டுமே என்றும் புராணங்கள் கூறுகின்றன. இவரை நரமுக விநாயகர் என்றும் அழைக்கிறார்கள். இத்திருத்தலத்தில் அமாவாசை நாட்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யப்படுவதால் காசி மற்றும் இராமேஸ்வரத்துக்கு இணையான புனிதமான தலமாகக் கருதப்படுகிறது.

இங்கு பிள்ளையார் சதுர்த்தி விழாவானது அபிஷேகம், பூஜை, அலங்காரத்துடன் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

சுயம்பு செல்வ விநாயகர்:- தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் என்று இதை சொல்லலாம். இங்கு சுயம்பாகத் தோன்றிய ஒரு விநாயகர் மற்றும் அவரைச் சுற்றி சுயம்பமாகத் தோன்றிய பத்து விநாயகர்கள் ஓம் வடிவத்தில் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகக் கருதப்படுகிறது.

அதே போல், விநாயகருக்கு மேற்கூரை இல்லாமல் அமைந்திருப்பதற்கும் சில காரணங்கள் கூறப்படுகின்றன.

இத்திருத்தலத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது மிக மிக விமரிசையாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சேண்பாக்கம் என்றும் ஊரில் இத்திருத்தலமானது அமைந்துள்ளது. 
Tags:    

Similar News