செய்திகள்
மின்கம்பத்தில் மோதிய கார் நொறுங்கி கிடக்கும் காட்சி.

கோவில்பட்டி அருகே நள்ளிரவில் விபத்து- மின்கம்பத்தில் கார் மோதி 2 பேர் பலி

Published On 2021-11-26 04:03 GMT   |   Update On 2021-11-26 04:03 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நள்ளிரவில் மின்கம்பத்தில் கார் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவில்பட்டி:

மதுரை கரிமேடு பகுதியை சேர்ந்தவர் ஹரி(44). இவர் அங்குள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.

இவர் பணியாற்றும் நிறுவனம் மதுரை மற்றும் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் ஆலையில் பணியாற்றும் ஊழியர்களை ஏற்றி செல்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் வாகனங்களை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் ஹரி நேற்றிரவு தனது நண்பர்கள் முருகன் (54), ரகுநாதன் (39) மற்றும் கோபால் (40) ஆகியோருடன் அம்பையில் இயங்கி வரும், தான் பணிபுரியும் டிராவல்ஸ் நிறுவனத்தின் வாகனங்களை மேற்பார்வையிடுவதற்காக ஒரு காரில் சென்றார்.

கார் நள்ளிரவு 12.30 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இடைச்செவல் பஸ் நிறுத்தம் பகுதியில் சென்ற போது திடீரென தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விலகி அப்பகுதியில் இருந்த மின்கம்பத்தில் அதிவேகமாக மோதியது.

இதில் கார் அப்பளமாக நொறுங்கியது மட்டுமின்றி, மின்கம்பமும் முற்றிலுமாக சரிந்து கிழே விழுந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

கோவில்பட்டி டி.எஸ்.பி. உதயசூரியன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று காரில் இருந்தவர்கள் மீட்க முயற்சி செய்தனர். கார் மீது மின் வயர்கள் விழுந்து கிடந்ததால் மின்வாரிய ஊழியர்கள் உதவியுடன் அப்பகுதியில் மின்சாரத்தினை தடை செய்து பின்னர் வயர்களை அகற்றினர்.

இதையெடுத்து காரில் சிக்கி இருந்தவர்களை தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்கும் பணிகளை மேற்கொண்டனர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் காருக்குள் சிக்கி உயிரிழந்த நிலையில் கோபால், முருகன் ஆகிய 2 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.

காயமடைந்த ஹரி, ரகுநாதன் ஆகிய 2 பேரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவில் தொடர்ந்து மழை பெய்த நிலையில் அதிவேகமாக வந்தது விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News