செய்திகள்
சிறை

நாமக்கல்லில் ரூ. 2½ லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி சேலம் ஜெயிலில் அடைப்பு

Published On 2021-04-29 09:17 GMT   |   Update On 2021-04-29 09:21 GMT
நாமக்கல்லில் ரூ. 2½ லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 2 பேர் விரைவில் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிகிறது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஸ்ரீ கம்பத்துக்காரர் சிறப்பு பள்ளி கடந்த 2016-ம்‌ ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியின் தலைவராக விஜயகுமாரும் (வயது 43), செயலாளராக அவரது மனைவி உமா மகேஸ்வரியும் இருந்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் ஆசிரியர்களில் 2 சிறப்பு ஆசிரியர்களுக்கும், ஒரு பிசியோதெரபிஸ்டுக்கும், 2020-21 ம் ஆண்டிற்கான மானிய ஊதியமாக ரூ.5 லட்சத்து 4 ஆயிரத்தை தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி வழங்கி உள்ளது.

இதற்கிடையே அந்த மானிய ஊதியம் தொடர்ந்து கிடைத்திட அதில் பாதி தொகையான ரூ.2 லட்சத்து 52 ஆயிரத்தை நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜான்சியும் (53), இணை மறுவாழ்வு அலுவலர் சேகரும் (48) சிறப்பு பள்ளி நிர்வாகி விஜயகுமாரிடம் லஞ்சமாக கேட்டு உள்ளனர். அதை தர மறுத்தால் மானிய ஊதியத்தை நிறுத்தி விடுவோம் எனவும், கிடைத்த மானிய ஊதியத்தையும் திரும்ப செலுத்த நேரிடும் எனவும் விஜயகுமாரை அவர்கள் மிரட்டி உள்ளனர்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத விஜயகுமார் இதுபற்றி நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள இணை மறுவாழ்வு அலுவலர் சேகரின் வீட்டிற்கு ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் விஜயகுமார் சென்றார்.

பின்னர் அங்கிருந்த இணை மறுவாழ்வு அலுவலர் சேகரிடம் ரூ.2½ லட்சத்தை விஜயகுமார் வழங்கி உள்ளார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சியின் வீட்டிற்கு சென்ற சேகர், லஞ்ச பணத்தை பங்கிட்டு ஜான்சியிடம் வழங்கியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே சேகரை பின்தொடர்ந்து சென்று, மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெய்குமார் மற்றும் போலீசார் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி மற்றும் இணை மறுவாழ்வு அலுவலர் சேகர் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.2½ லட்சத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பிறகு 2 பேரையும் அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு ரத்த மாதிரி, சளி உள்ளிட்டவை எடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ஜான்சி, சேகர் ஆகியோர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி, அவர்கள் 2 பேரையும் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி போலீசார் கைதான ஜான்சியை சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் சிறையிலும், சேகரை பரமத்திவேலூர் கிளை சிறையிலும் அடைத்தனர்.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி கூறுகையில், ஜெயிலில் அடைக்கப்பட்ட இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி துறை தலைவருக்கு இன்று அல்லது நாளைக்குள் அறிக்கை அனுப்பி வைக்கப்படும். அதில், இருவரையும் சஸ்பெண்டு செய்யுமாறு பரிந்துரை செய்யப்படும் என்றார்.

எனவே ஜான்சி, சேகர் ஆகியோர் விரைவில் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிகிறது.

Tags:    

Similar News