ஆன்மிகம்
பழனி

தைப்பூச திருவிழா நிறைவாக பழனியில் நாளை தெப்பத்தேர் உற்சவம்

Published On 2021-01-30 08:45 GMT   |   Update On 2021-01-30 08:45 GMT
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம் நடைபெறுகிறது.
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் தந்தப் பல்லக்கு, புதுச்சேரி சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். மேலும் வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்க மயில், தங்கக்குதிரை, தோளுக்கு இனியான் உள்ளிட்ட வாகனங்களில் சாமி புறப்பாடு மற்றும் சமூக அமைப்புகளின் சார்பில் மண்டகப்படி பூஜை நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் மற்றும் வெள்ளி தேரோட்டம் கடந்த 27-ந் தேதியும், தைப்பூச தேரோட்டம் நேற்று முன்தினமும் நடைபெற்றது. இந்த விழாக்களில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து கலந்துகொண்டனர். அதோடு வெளிமாநில பக்தர்களும் அதிக அளவில் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

இந்தநிலையில் தைப்பூச திருவிழாவின் 9-ம் நாளான இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் புதுச்சேரி சப்பரத்தில் ரதவீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு பெரிய தங்கமயில் வாகனத்தில் முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானையுடன் ரதவீதி உலா நடைபெறுகிறது. திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து இரவு 11 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News