செய்திகள்
சென்னை ஐகோர்ட்

சீன அதிபர் வருகையால் சென்னை சுத்தமாகி விட்டது - ஐகோர்ட்டு நீதிபதி கருத்து

Published On 2019-10-10 09:10 GMT   |   Update On 2019-10-10 09:10 GMT
சீன அதிபர் வருகிறார் என்றதும், சென்னை மாநகரே சுத்தமாக உள்ளது. தினமும் தமிழகத்துக்கு மற்ற உலக தலைவர்கள் வந்தால், எப்போதுமே சுத்தமாக இருக்கும் என்று ஐகோர்ட்டு நீதிபதி கருத்து கூறி உள்ளார்.

சென்னை:

அ.தி.மு.க. நிர்வாகி ஜெயகோபாலின் இல்லத் திருமண விழாவுக்கு பள்ளிக்கரணையில் வைக்கப்பட்ட பேனர் காற்றில் கீழே சரிந்தது. அப்போது சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற 23 வயது இளம்பெண் மீது விழுந்தது.

அவர் நிலைதடுமாறி சாலையில் விழுந்தபோது, பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி இறங்கியது. இதில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த சம்பவத்துக்கு சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில், பலியான சுபஸ்ரீயின் தந்தை ரவி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனரினால் தான் என் மகள் பலியானார். இந்த சம்பவத்தில் குற்றவாளியை போலீசார் உடனடியாக கைது செய்யவில்லை. ஐகோர்ட்டு கேள்வி எழுப்பிய பின்னரே, பல நாட்கள் கழித்து ஜெயகோபால் உள்பட பலரை கைது செய்துள்ளனர். சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்களை தடுக்க கடுமையான சட்டத்தை இயற்றவேண்டும் என்றும் என் மகள் பலியானதற்கு அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்குதான் காரணம் என்பதால், எனக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் என் மகள் பலியானது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சிறப்பு புலனாய்வு குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, என் மனுவை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சி.சரணவன் ஆகியோர் முன்பு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘சுபஸ்ரீ பலியானது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை கண்காணிக்க போலீஸ் கமி‌ஷனருக்கு ஏற்கனவே இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் ஜெயகோபால், மேகநாதன் ஆகியோரை போலீசார் ஏற்கனவே கைது செய்து விட்டனர். பலியான பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இடைக்கால இழப்பீடாக வழங்கப்பட்டு விட்டது. இந்த சம்பவத்துக்கு பின்னர் தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் பேனர் வைக்க அனுமதி வழங்கப்படவில்லை’ என்று கூறினார்.


மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘சுபஸ்ரீ பலியானது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளை சிறப்பு புலனாய்வு பிரிவு மூலம் விசாரணை நடத்த வேண்டும்’ என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சீன அதிபர் வருகிறார் என்றதும், சென்னை மாநகரே சுத்தமாக உள்ளது. தினமும் தமிழகத்துக்கு மற்ற உலக தலைவர்கள் வந்தால், எப்போதுமே சுத்தமாக இருக்கும் என்று கருத்து கூறினார்.

பின்னர் நீதிபதிகள், ‘ஏற்கனவே, சுபஸ்ரீ மரணம் தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சே‌ஷசாயி ஆகியோர் அமர்வு விசாரித்து வருகிறது.

அந்த வழக்குடன் இந்த வழக்கை விசாரிக்க அதே அமர்வுக்கு பரிந்துரை செய்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News