செய்திகள்
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்ச்சியில் நியூசிலாந்து வீரர்கள்

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் - வெற்றியின் விளிம்பில் நியூசிலாந்து

Published On 2021-06-12 20:57 GMT   |   Update On 2021-06-12 20:57 GMT
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்து வீரர் ஹென்றி முதல் இன்னிங்ஸ் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் தலா 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
பர்மிங்காம்:

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் பெர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 101 ஓவரில் 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் 81 ரன் எடுத்து அவுட்டானார். மார்க் வுட் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய டேனியல் லாரன்ஸ் 81 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நியூசிலாந்து சார்பில் போல்ட் 4 விக்கெட்டும், ஹென்றி 3 விக்கெட்டும், படேல் 2 விக்கெட்டும்,  நீல் வாக்னர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடியது. டேவன் கான்வே 80 ரன்னும், வில் யங் 82 ரன்னும் எடுத்தனர்.

இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 76.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. ராஸ் டெய்லர் 46 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. பொறுப்புடன் ஆடிய ராஸ் டெய்லர் அரை சதமடித்தார். அவர் 80 ரன்னில் வெளியேறினார். இறுதியில், நியூசிலாந்து முதல் இன்னின்சில் 119.1 ஓவரில் 388 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராடு 4 விக்கெட்டும், மார்க் வுட், ஒல்லி ஸ்டோன் தலா 2 விக்கெட்டும், ஆண்டர்சன், டேனியல் லாரன்ஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, 85 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது.



நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் துல்லிய பந்து வீச்சில் இங்கிலாந்து நிலைகுலைந்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இங்கிலாந்து 37 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

நியூசிலாந்து சார்பில் ஹென்றி, நீல் வாக்னர் தலா 3 விக்கெட்டும், அஜாஸ் படேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

டெஸ்ட் முடிய இன்னும் இரு நாட்கள் உள்ள நிலையில் நியூசிலாந்து அணி இன்னும் ஒரு விக்கெட்டை கைப்பற்றினால் போதும், எளிதில் போட்டியை வென்று தொடரையும் 1-0 என கைப்பற்றவே அதிக வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News