செய்திகள்
மறைமலை அடிகள் சாலையில் வெள்ளரி, நுங்கு விற்பனை நடப்பதை காணலாம்

அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் கொளுத்தும் வெயிலை தாங்க முடியாமல் மக்கள் அவதி

Published On 2021-05-10 02:48 GMT   |   Update On 2021-05-10 02:48 GMT
புதுச்சேரியில் நேற்று அதிகபட்சமாக 96.62 டிகிரியும், காரைக்காலில் 95.18 டிகிரியும் வெயில் பதிவானது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி:

அக்னி நட்சத்திரம் எனப்படும் கோடைவெயில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. எனவே புதுவையில் கத்திரி வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அதன்படி நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேரம் செல்ல செல்ல வெயில் கொடுமை கூடியது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்து வீடுகளிலேயே முடங்கினர்.

நண்பகல் வேளையில் நகரின் பிரதான சாலைகள் வெறிச்சோடியே காணப்பட்டன. வெயிலில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள சாலையில் நடந்து சென்றோர் குடை பிடித்தபடியும், தலையில் துணி போட்டுக்கொண்டும், பெண்கள் தங்களது துப்பட்டாவால் தலையை மூடிக்கொண்டு சென்றதையும் காணமுடிந்தது. கடுமையான வெயில் கொளுத்தியதோடு அனல்காற்றும் வீசியது. சாலைகளில் பல இடங்களில் கானல்நீரும் தென்பட்டன.

வெப்ப காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். வெயிலில் சுற்றியவர்களுக்கு தாகம் அதிகமாக இருந்ததால் குளிர்ந்த பானங்களை பருகுவதற்கு அதிகமாக விரும்பினார்கள். இதனால் சாலையோரங்களில் உள்ள இளநீர், கரும்புச்சாறு, தர்ப்பூசணி, குளிர்பானங்கள், முலாம் பழம் ஜூஸ் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதுதவிர வெள்ளரி, நுங்கு விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

புதுச்சேரியில் நேற்று அதிகபட்சமாக 96.62 டிகிரியும், காரைக்காலில் 95.18 டிகிரியும் வெயில் பதிவானது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News