செய்திகள்
மழை காரணமாக செங்கற்கள் கொட்டகையில் வைக்கப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

கும்பகோணத்தில் தொடர்மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு

Published On 2020-11-19 13:26 GMT   |   Update On 2020-11-19 13:26 GMT
கும்பகோணத்தில் தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர்.
கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் காவிரி ஆறு ஓடுகிறது. இந்த காவிரி ஆற்றிலிருந்து பிரிந்து குடமுருட்டி ஆறு, திருமலைராயன் ஆறு, அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, மண்ணியாறு, பொய்கை ஆறு உள்ளிட்ட பல்வேறு கிளை ஆறுகளும் மற்றும் பல்வேறு துணை ஆறுகளும் செல்கிறது. இந்த ஆறுகளை ஓட்டியுள்ள பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன.

கும்பகோணத்தை அடுத்த வீரமாங்குடி, மணலூர், பட்டீஸ்வரம், தாராசுரம், அன்னலக்ரஹாரம், அரியதிடல், கொற்கை, கீழபழையார், மேலபழையார், உமையாள்புரம், சத்தியமங்கலம், பாபநாசம், திருப்பனந்தாள், திருவிடைமருதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செங்கல் உற்பத்தி தொழில் நடந்து வருகிறது. கும்பகோணம் பகுதியில் உள்ள 300 செங்கல் சூளைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். செங்கல் உற்பத்தியே இவர்களுடைய வாழ்வாதாரமாகும்.

தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. கும்பகோணத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் செங்கல் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக செங்கல் உற்பத்திக்கும் தேவைப்படும் மண் நனைந்து, அதில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மண் கொண்டு செங்கல் அறுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் காய வைத்திருக்கும் செங்கல் மழையில் நனைந்து சேதமடைந்து வீணாகி வருகிறது. இது சூளை உரிமையாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தொழிலாளர்களுக்கு கூலி கொடுப்பதிலும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

மழை காலத்திற்கு முன்பு அறுக்கப்பட்ட செங்கல் சூளையில் வேகவைக்க முடியாமல் கொட்டகை அமைத்து அதில் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

தற்போது மழைகாலம் என்பதால் கட்டிடப்பணிகள் நடைபெறாமல் உள்ளது. ஏற்கனவே சூளையில் வேக வைக்கப்பட்ட கற்கள் விற்பனையாகாமல் உள்ளதால், சூளை வைத்திருப்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர் மழை காரணமாக செங்கல் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News