செய்திகள்
சென்னையில் இன்று காலை பனிமூட்டம் காணப்பட்டது.

பனி-போகி புகையால் சென்னையில் 42 விமான சேவை பாதிப்பு

Published On 2020-01-14 05:23 GMT   |   Update On 2020-01-14 05:23 GMT
சென்னை விமான நிலையத்தில் கடும் பனிமூட்டத்துடன் போகி புகையும் சூழ்ந்து இருந்ததால் இன்று காலை 42 விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
சென்னை:

சென்னையில் இன்று காலை கடும் பனிமூட்டம் காணப்பட்டது. போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் வாகனங்களில் சென்றவர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்திலும் கடும் பனிமூட்டமும், போகி புகையும் சூழ்ந்து இருந்தது. இதனால் இன்று காலை விமான போக்குவரத்து பாதிப்பு அடைந்தது.

இன்று காலை வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையம் வர வேண்டிய மஸ்கட், அபுதாபி, சார்ஜா, கோலாலம்பூர், சிங்கப்பூர் விமானங்கள், ஐதராபாத், புனே, பெங்களூரு, கொல்கத்தா, திருவனந்தபுரம், அகமதாபாத் நகரங்களில் இருந்து வரும் உள்நாட்டு விமானங்கள் உள்பட 16 விமானங்கள் தாமதமாக வந்தன.

இதுபோல் சென்னையில் இருந்து இன்று காலை புறப்பட்டு அபுதாபி, கோலாலம்பூர், சிங்கப்பூர், துபாய், லண்டன் செல்ல வேண்டிய வெளிநாட்டு விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. மும்பை, வாரணாசி, திருவனந்தபுரம், தூத்துக்குடி, பெங்களூரு, ஐதராபாத் செல்ல வேண்டிய உள்நாட்டு விமானங்கள் உள்பட 26 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.



மொத்தமாக சென்னைக்கு வந்து செல்லும் 42 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. இன்று காலை சுமார் 2 மணி நேரம் விமான சேவை பாதிப்பு அடைந்ததால் விமான பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

மொரிசீயஸ் நாட்டில் இருந்து பெங்களூரு வழியாக காலை 6.15 மணிக்கு சென்னை வந்து காலை 7.45 மணிக்கு இங்கிருந்து புறப்படும் ஏர் மொரிசீயஸ் விமானம் இன்று ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்த விமானத்தில் செல்ல வேண்டிய பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

காலையில் குறிப்பிட்ட நேரத்தில் விமானங்கள் வந்து செல்லவில்லை. வரும் நேரமும், புறப்படும் நேரமும் முறைப்படி அறிவிக்கப்படவில்லை. இதனால் பயணிகள் தவிப்புடன் காணப்பட்டனர்.
Tags:    

Similar News