செய்திகள்
சிம்மக்கல் தரைப்பாலத்தை மூழ்கடித்துச் செல்லும் வெள்ளம்.

தொடர் கனமழையால் மதுரை வைகையாற்றில் பெருக்கெடுத்து செல்லும் வெள்ளம்

Published On 2021-11-27 08:26 GMT   |   Update On 2021-11-27 08:26 GMT
நீர்ப்பிடிப்பு பகுதியான வருசநாடு, மேகமலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
மதுரை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 2 வாரமாக மாநிலம் முழுவதும் பரவலாக பலத்த மழை கொட்டித்தீர்ப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பெருமழையால் தமிழகத்தின் முக்கிய அணைகள், ஏரிகள், குளங்கள் மற்றும் சிறிய நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்கும் வைகை அணைக்கு கடந்த 2 வாரங்களாகவே நீர்வரத்து கணிசமாக அதிகரித்து வந்தது.

நீர்ப்பிடிப்பு பகுதியான வருசநாடு, மேகமலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக அணையின் முழு கொள்ளளவான 71 அடியில் 69.65 அடி நீர் நிரம்பியது. அணையின் பாதுகாப்பை கருதி தண்ணீர் நேற்று 7,200 கன அடி தண்ணீர் வைகையாற்றில் வெளியேற்றப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் இன்று மதுரை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை முதலே நகர் வைகையாற்றில் நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இன்று காலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சிம்மக்கல் தரைப்பாலம், ஓபுளா படித்துறை, குருவிக்காரன் சாலை தரைப்பாலங்கள் மூழ்கின.

பொதுமக்களின் பாதுகாப்பை கருதி மேற்கண்ட பகுதிகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணித்து வந்தனர்.

பல மாதங்களுக்கு பின் வைகை ஆற்றில் 7,200 கன அடி தண்ணீர் செல்வதால் மதுரை நகர பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

ஏ.வி.மேம்பாலம், வண்டியூர் மேம்பாலம் மற்றும் ஆற்றின் கரையோரப்பகுதிகளில் இன்று பொதுமக்கள் திரண்டு பார்த்துச் செல்கின்றனர். சிலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

வைகை அணையில் இருந்து இன்று காலை 3,200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கும் என்பதால் ஆற்றில் கரையோரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.




Tags:    

Similar News