ஆன்மிகம்
தவக்கோலத்தில் குருபகவான் மற்றும் சக்கரத்தாழ்வார்.

குருவித்துறை கோவிலில் குருப்பெயர்ச்சி விழா 13-ந் தேதி லட்சார்ச்சனையுடன் தொடக்கம்

Published On 2020-11-09 05:37 GMT   |   Update On 2020-11-09 05:37 GMT
குருவித்துறை குருபகவான் கோவிலில் இந்த ஆண்டு வருகிற 13-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி அளவில் லட்சார்ச்சனை தொடங்கி தொடர்ந்து 14-ந் தேதி சனிக்கிழமை இரவு 7 மணி வரை லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. சித்திர ரத வல்லப பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் ஆயிரம் சித்திரங்கள் வரையப்பட்ட தேரில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்ததால் இத்திருத்தலம் சித்திரை நட்சத்திரத்திற்கு உரிய திருத்தலமாக விளங்கி வருகிறது.

இந்த கோவில் முன்பாக தவக்கோலத்தில் சுயம்பு குருபகவான் இருக்கிறார். அருகில் சக்கரத்தாழ்வார் ஆகியோர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

இது இத்திருத்தலத்தில் சிறப்பாகும். இங்கு ஒவ்வொரு குருபெயர்ச்சியின்போது 3 நாட்கள் விழா சிறப்பாக நடைபெறும். இதில் பல்வேறு மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து பரிகார யாகத்தில் கலந்து கொண்டு குருபகவானை தரிசித்து செல்வார்கள்.

இதேபோல் இந்த ஆண்டு வருகிற 13-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி அளவில் லட்சார்ச்சனை தொடங்கி தொடர்ந்து 14-ந் தேதி சனிக்கிழமை இரவு 7 மணி வரை லட்சார்ச்சனை நடைபெறுகிறது. 15-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9.48 மணிக்கு குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் அன்று இரவு 7.48 மணிக்கு பரிகார மகா யாகம் தொடங்கி 9.48 மணிக்குள் நடைபெறும். பின்னர் மகா பூர்ணாகுதி நடைபெற்று திருமஞ்சனம் நடைபெறும்.

இதையொட்டி குருபகவானுக்கு 21 அபிஷேகங்கள் நடைபெற்று மகா திருமஞ்சனம் நடைபெறும். பரிகாரம் செய்ய வேண்டிய மகரம், தனுசு, கும்பம், சிம்மம், மேஷம், விருச்சிகம், மிதுனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகார யாகத்தில் கலந்து கொள்ளலாம்.

கொரோனோ தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு அரசால் அவ்வப்போது அறிவிக்கப்படும் அரசு உத்தரவுக்கு உட்பட்டும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும். 10 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை தக்கார் வெண்மணி, செயல் அலுவலர் சுரேஷ் கண்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News