செய்திகள்
கோப்புபடம்

ரியல் எஸ்டேட் செய்வதாக கூறி ரூ.2½ கோடி மோசடி - ஆசிரியர் உள்பட 3 பேர் கைது

Published On 2021-09-08 11:10 GMT   |   Update On 2021-09-08 11:10 GMT
ரியல் எஸ்டேட் செய்வதாக கூறி 26 பேரிடம் ரூ.2½ கோடி மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த ஆலங்குப்பத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 31). இவர் வேப்பேரி அரசு பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டில் படிக்கும்போது அங்கு அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்த வானூர் தாலுகா பட்டானூரை அடுத்த நாவற்குளம் விரிவு திரிபுரசுந்தரி நகரை சேர்ந்த ராமசாமி (49) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கத்தின் அடிப்படையில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பிரகாசை சந்தித்த ராமசாமி, பி.டெக் முடித்துவிட்டு வருமானத்திற்கு வழியில்லாமல் இருக்கிறாயே என்று கேட்டுள்ளார். அதோடு ராமசாமி, பிரகாசிடம் தொழில் செய்ய வழி செய்கிறேன் என்று கூறி முருக்கேரியில் தனியார் கணினி மையம் நடத்தி வரும் காஞ்சீபுரம் பாண்டவர்பெருமாள் கோவில் மேற்கு மாடவீதியை சேர்ந்த சக்திவேல் என்கிற ஸ்ரீகாந்த் (43) என்பவரையும், அதன் பங்குதாரர்களான விழுப்புரம் அருகே கோலியனூர் விஜயரங்கன் நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் மனைவி கவுசல்யா (40), அவரது மகன் கவியரசன் (22) ஆகியோரையும் அறிமுகப்படுத்தினார்.

அப்போது சக்திவேல் உள்ளிட்ட 3 பேரும் பிரகாசிடம் எங்கள் நிறுவனம் மூலம் பல இடங்களில் நிலங்களை வாங்கி ரியல் எஸ்டேட் செய்து வருவதாகவும், நீங்கள் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.18 ஆயிரம் வீதம் மாதந்தோறும் கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர். அதன்பேரில் பிரகாஷ் மற்றும் தனக்கு தெரிந்த 25 பேரை அந்நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர்த்து அவர்களிடம் ரூ.2 கோடியே 63 லட்சத்தை வசூல் செய்து கொடுத்துள்ளார். ஆனால் பிரகாஷ் உள்ளிட்ட 26 பேருக்கும் மாதந்தோறும் பணம் தராமல் ஏமாற்றி வந்ததோடு, ரவுடியை வைத்து கொலை செய்து விடுவதாகவும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில் நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல், கவுசல்யா, ராமசாமி ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கவியரசனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைதான ராமசாமி, தற்போது மயிலம் அருகே பாதிராப்புலியூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News