செய்திகள்
எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா

எந்த தடுப்பூசியும் 100 சதவீதம் செயல்திறன் வாய்ந்தது அல்ல -எய்ம்ஸ் இயக்குனர் பேட்டி

Published On 2021-04-17 10:27 GMT   |   Update On 2021-04-17 10:29 GMT
பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியதும் மக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதை நிறுத்திவிட்டார்கள் என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் தெரிவித்தார்.
புதுடெல்லி:

எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா கூறியதாவது:-

எந்த ஒரு தடுப்பூசியும் 100 சதவீதம் செயல்திறன் வாய்ந்தது அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டாலும் தொற்று நோய் பாதிப்பு ஏற்படலாம், ஆனால் உடலில் உள்ள ஆன்டிபாடிகள் அந்த வைரசைப் பல்கிப் பெருக  அனுமதிக்காது. கடுமையான நோய் பாதிப்பு இருக்காது.

கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் 2 முக்கிய காரணங்கள் உள்ளன. ஜனவரி / பிப்ரவரி மாதங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கிய பிறகும், பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியதும் மக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதை நிறுத்திவிட்டார்கள். அந்த சமயத்தில் வைரஸ் உருமாற்றம் அடைந்ததுடன், அது வேகமாக பரவியது.



இந்த நேரத்தில் ஏராளமான மத நிகழ்வுகள் நடைபெற்றன. தேர்தலும் நடைபெற்றது. உயிர்களும் நமக்கு முக்கியம் என நாம் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும். மத உணர்வைப் பாதிக்காத வகையில் இதை நாம் கட்டுப்பாடுகளுடன் செய்ய முடியும். கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றலாம்.

6-7 மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட டெல்லியில் இப்போது பாதிப்பு அதிக அளவில் உள்ளது. கடந்த காலங்களில் செய்ததைப் போன்று, சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News