ஆன்மிகம்
திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவில்

சிற்பக் கலைகள் நிறைந்த திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவில்

Published On 2021-04-07 03:47 GMT   |   Update On 2021-04-07 03:47 GMT
சிற்பக் கலைகள் நிறைந்த திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவில்.
போர் வெற்றிகளைக் கொண்டாட மூன்றாம் குலோத்துங்கன் எழுப்பிய பெரிய கோவில், தீவினை நீக்கும் ஆதிசரபேஸ்வரர் சன்னிதி கொண்ட ஆலயம், சிற்பக் கலைகள் நிறைந்த திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவில்.

புராண வரலாறு :

அச்சுவக்கிரீவன், விடபக்கிரீவன், வியாளக்கிரீவன் ஆகிய மூன்று அசுரர்களும், சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தனர். அதன் பயனால் தேவராலும் மற்ற எவராலும் அழியாத வரம் பெற்றனர். பொன், வெள்ளி, இரும்புக்கோட்டை அமைத்து, தேவர்களையும், உலக உயிர்கள் அனைத்தையும் துன்புறுத்தி வந்தனர். நடுநடுங்கி வாழ்ந்த தேவர்களும், முனிவர்களும், சிவனிடம் சரணடைந்தனர். அவர்களின் வேண்டு கோளுக்கு இணங்கி, தமது நகைப்பினால் மூன்று அசுரர்களையும், அவர்களின் கோட்டைகளையும் அழித்தொழித்தார். இதனால் அனைவரின் வாழ்விலும் பயத்தால் ஏற்பட்ட நடுக்கம் நீங்கியது.

இதேபோல, இரண்யனை அழித்த நரசிம்மருக்கு ஏற்பட்ட அசுரத்தன்மையால், உலக உயிர்கள் நடுநடுங்கின. தேவர்கள் உள்ளிட்ட அனைவரின் வேண்டுதலின்படி, சரபேஸ்வரர் வடிவம் எடுத்து, நரசிம்மரைச் சாந்தப்படுத்தி, இயல்புநிலைக்கு வரச்செய்து அமைதியை ஏற்படுத்தினார்.

மொத்தத்தில், வாழ்வில் நடுக்கத்தை சந்தித்த அனைவரின், கம்பத்தினை (நடுக்கத்தை) நீக்கிய இறைவனாக, இத்தலத்து இறைவன் விளங்கியதால், ‘கம்பகரேஸ்வரர்’ என்றும், ‘நடுக்கம் தவிர்த்த பெருமான்’ என்றும் அழைக்கப்படுகின்றார்.

ஆலய அமைப்பு :

கிழக்கு நோக்கிய அகன்ற வடிவ ராஜகோபுரம் பிரம்மாண்டமாய் ஏழு நிலைகளைக் கொண்டுள்ளது. இந்தக் கோபுரம் முழுவதும் பல்வேறு புராணங்களை நினைவுபடுத்தும் சுதைச் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. கொடி மரம், பலிபீடம், நந்தி மண்டபம் கடந்ததும் மூன்று நிலை கோபுரம் காட்சி தருகிறது. அதைக் கடந்து உள்ளே சென்றால் சுவாமி, அம்பாள் சன்னிதியை தரிசனம் செய்யலாம்.

ஆலயம் தஞ்சை பெரிய கோவில், தாராசுரம், கங்கை கண்டசோழபுரம் கோவிலோடு ஒப்பிடும் விதத்தில் பிரம்மாண்டமாகவும், விசால மானதாகவும் அமைக்கப் பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் கருவறை விமானம் ‘சச்சிதானந்த விமானம்’. அது அமைதியையும், ஆனந்தத்தையும் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சிற்பங்களில் குறிப்பிடத்தக்கது, லிங்கோத்பவர் சிலா வடிவமும், பிச்சாடனர் உலா வடிவமும் ஆகும்.

இத்தலத்தில் இறைவன் பெயர் ‘நடுக்கந்தீர்த்த நாயகர்’ என்ற திருநாமத்துடன் அருள்கிறார். இவரே ‘கம்பகரேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மாண்ட வடிவில் கிழக்கு முகமாய் ஒளிவீசும் திருமேனியில் இறைவன் காட்சி தருகின்றார். இத்தல இறைவனுக்கு திரிபுவனமுடையார், திரிபுவன ஈஸ்வரர், திருபுவன மகாதேவர் என்ற பெயர்களும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவாமி சன்னிதியின் இடதுபுறம் தனி சன்னிதியாக அம்பாள் சன்னிதி அமைந்துள்ளது. அதில் தர்மசவர்த்தினி எனும் அறம் வளர்த்த நாயகி வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். தேவர்களின் நடுக்கத்தை இறைவன் தீர்த்த பின், அறங்களை வளர்ப்பவளாக இத்தல அன்னை இருக்கிறாள்.

அம்மன் சன்னிதிக்கு நேர் எதிரே, இத்தலத்தின் முக்கிய சன்னிதியாக விளங்கும் சரபேஸ்வரர் சன்னிதி, தெற்கு முகமாய் அமைந்துள்ளது. இதுவே ஆதிசரபேஸ்வரர் சன்னிதியும், திருக்கோவிலும் ஆகும். மூலவர் கலைநயத்துடன் காட்சி தருவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இவரின் அருகில் உற்சவமூர்த்தியாக சரபேஸ்வரர் அமர்ந்துள்ளார்.

சரபேஸ்வரர் கருவறையின் முகப்பில் இரண்டு அழகிய பெண்கள் துவார சக்திகளாக அமைந்துள்ளனர். இச்சிலைகள் மிகவும் கலைநயம் கொண்டதாக உள்ளது. சிவன், விஷ்ணு, துர்க்கை, சூலினி சக்தி களின் வடிவமான சரபருக்கு இப்பெண்கள் காவல் புரிகின்றனர்.

பங்குனி மாதத்தில் 15 நாட்கள் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. ஏழாம் நாள் திருக்கல்யாணம், ஒன்பதாம் நாள் திருத்தேர், பத்தாம்நாள் காவிரியில் தீர்த்தம் கொடுத்தருளல், பன்னிரண்டாம் நாள் சரபேஸ்வரர் ஏகதின உற்சவம் மற்றும் வெள்ளி ரதத்தில் வீதியுலா ஆகியவை நடைபெறும். இது தவிர, ஞாயிறு ராகு காலத்தில் சரபேஸ்வரர் சிறப்பு பூஜை மற்றும் ஏனைய விழாக்களும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றன.

சரபேஸ்வரர் :

தன் பக்தன் பக்த பிரகலாதனுக்காக, இரண்யன் பெற்ற வரத்தின்படி மனிதனும் இல்லாத மிருகமும் இல்லாத வடிவமாக நரசிம்மராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, இரண்யனை அழித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

அதன்படி இரண்யனின் குடலை உருவி மாலையாக அணிந்த நரசிம்மர், இரண்யனின் உதிரத்தைக் குடித்தார். இதனால் அவரது செயல் அசுரத்தனமாக மாறியது. அவரது இந்த மாற்றத்தால் உலகே அச்சத்தில் நடுங்கியது. அனைவரும் சிவபெருமானிடம் சரணடைந்தனர்.

அதற்குச் செவி மடுத்த சிவபெருமான், தன் அம்சத்தில் இருந்து தோன்றிய வீரபத்திரரிடம் நரசிம்மரின் அட்டகாசங்களை நிறுத்தி, அவரை சாந்த மூர்த்தியாக்கஆணை யிட்டார்.

வீரபத்திரர் பேரண்டப் பட்சியாக, சரப வடிவம் ஏற்றார். எட்டுக் கால்கள், சிங்கமுகம், நரிவால் கொண்டிருந்த அந்த தோற்றத்தைக் கொண்டு, நரசிம்மரை சாந்தப்படுத்தினார். அதே வடிவத்தில் சரபேஸ்வரர் என்ற பெயரில் கோவில் கெண்டார். பல்வேறு திருக்கோவில்களில் சரபேஸ்வரர் வடிவங்கள் இருந்தாலும், திரிபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள சரபேஸ்வரரே பிரதானமாக போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தின் உற்சவமூர்த்தியும் சரபேஸ்வரர் தான்.

இங்குள்ள சரபர் ஆறு கால்கள், நான்கு கரங்களுடன் பன்னிரு கால் பீடத்தையும், இரு கரங்கள் நரசிம்மனைப் பற்றியும் அமைந்துள்ளது.

எதிரிகளால் தொல்லைகளில் இருந்து விடுபடவும், பகைவர்களை அழிக்கவும் வரம் தரும் வள்ளலாக இவர் போற்றப்படுகின்றார்.

தொன்மைச் சிறப்பு:

இவ்வாலயத்தில் ஆறு கல்வெட்டுகள் கி.பி. 1907-ம் தொல்லியல் அறிக்கையில் பட்டியல் இடப்பட்டுள்ளன. அதன்படி இவ்வாலயம் ஈழம், கொங்குநாடு, வடநாடு, சேரர், பாண்டியர், தெலுங்கர் பலரையும் வென்றதின் நினைவாக, மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டதை, கி.பி. 1178-ம் ஆண்டு கல்வெட்டு குறிப்பிடுகிறது. நடராஜன் சன்னிதி, முகமண்டபம் எழுப்பப்பட்ட தகவலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் குலோத்துங்கனின் ஆசிரியரான ஸ்ரீகந்த சம்புவின் மகனான ஈஸ்வர சிவன், இந்தக் கோவிலை நிர்மாணித்ததைக் கல்வெட்டு செய்தி ஒன்று குறிப்பிடுகிறது. இதுதவிர, ஜடாவர்மன் பராக்கிரம பாண்டியனும் இந்த ஆலயத்திற்கு திருப்பணி செய்ததை அறிய முடிகிறது.

சரபேஸ்வரர் வழிபாடு :

எதிரிகளின் தொல்லைகளால் அவதிப்படுவோர், ஏவல், பில்லி, சூனியம் என தீவினைகளால் துன்பப்படுவோர், நோயுற்றவர்கள் என எவ்விதமான துன்பங்களுக்கும் துயர் நீக்கும் கடவுளாக, சரபேஸ்வரர் போற்றப்படுகிறார். ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில், 11 நெய் தீபம் ஏற்றி, 11 சுற்று வலம் வந்து இவரை வழிபட்டுச் சென்றால் மேற்படி தொல்லைகளில் இருந்து விடுபடலாம் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இதனை பதினோரு வாரங்கள் தொடர்ந்து செய்தல் வேண்டும். இதுதவிர ஆலயத்தில் கட்டணம் செலுத்தி சிறப்பு அர்ச்சனை களிலும் பங்கேற்கலாம்.

இந்த ஆலய தலமரம் வில்வம். தலத்தீர்த்தம் நிறைய இருந்தாலும், சரபேஸ்வரர் தீர்த்தம் பிரதானமாக அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் மாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்படும்.

அமைவிடம் :

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில், கும்பகோணம் - மயிலாடுதுறை வழித்தடத்தில், கிழக்கே 6 கி.மீ. தொலைவில் திருபுவனம் அமைந்துள்ளது.
Tags:    

Similar News