ஆன்மிகம்
கோவில் தோற்றம்

நோய்களை தீர்க்கும் தாமரம்குளங்கரா தர்மசாஸ்தா கோவில்

Published On 2019-08-31 04:01 GMT   |   Update On 2019-08-31 04:01 GMT
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், திருப்புனித்துறையில் அமைந்திருக்கிறது, தாமரம்குளங்கரா தர்மசாஸ்தா கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், திருப்புனித்துறையில் அமைந்திருக்கிறது, தாமரம்குளங்கரா தர்மசாஸ்தா கோவில். இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஐயப்பன், தன்வந்திரியின் மறு தோற்றமாகக் கருதப்படுகிறார். இவரை வழிபடும் பக்தர்களுக்கு அனைத்து விதமான உடல் நோய்களும் நீங்கி நலம் பெறுவர் என்பது நம்பிக்கையாகும்.

தல வரலாறு :

சாம்ராவட்டம் சாஸ்தா (ஐயப்பன்) கோவிலில் பூஜைப் பணி செய்தவர்களில் ஒருவர், மொரக்காலா மணா. இவர் குறிப்பிட்ட சில காரணங்களால், திருப்புனித்துறை என்னும் ஊருக்கு இடம் பெயர்ந்து சென்றார். அப்போது சாம்ராவட்டம் சாஸ்தா ஒரு பல்லி வடிவிற்கு மாறி, அவர் எடுத்துச் சென்ற பனை ஓலையிலான குடையின் மேல் அமர்ந்து அவருடன் சென்றார்.

திருப்புனித்துறை அருகில் ஒரு இடத்தில் அவர் ஓய்வெடுத்த போது, அவரது குடையிலிருந்த பல்லி கீழேக் குதித்தது. அந்தப் பல்லி, தன்னுடைய சாஸ்தா உருவத்தைக் காட்டி மறைந்தது. இதைக் கண்டு ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்த மொரக்காலா மணா, பல்லி விழுந்த இடத்திலேயே சாஸ்தாவிற்கு சொந்தமாக ஒரு கோவிலை கட்டினார். தினமும் அந்த ஆலயத்தில் உள்ள இறைவனை வழிபட்டு வந்தார்.

மொரக்காலா குடும்பத்திற்குப் போதிய வரு மானம் கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானதை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் கோவிலை எப்படி பராமரிப்பது? என்றும் அவர் வருத்தம் அடைந்தார். 1930-ம் ஆண்டில் கொச்சி மன்னரைச் சந்தித்த அவர், தான் பராமரித்து வந்தக் கோவிலை மன்னரிடம் ஒப்படைத்துச் சிறந்த முறையில் பராமரிக்கும்படி வேண்டினார். மன்னரும் அவர் வேண்டுதலை ஏற்றுக் கொண்டு, அந்தக் கோவிலில் தினசரி வழிபாடுகளைச் செய்திடத் தேவையான நிதியுதவிகளைச் செய்தார்.

இந்தியா விடுதலை பெற்ற பின்பு, மன்னராட்சி முறையிலான சிற்றரசுகள் அனைத்தும் காலியான நிலையில், கோவில் பராமரிப்புக்கும், வழிபாட்டிற்கும் மீண்டும் சிக்கல்கள் எழுந்தன. அதன் பிறகு, 1953-ம் ஆண்டில் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த இளைஞர்கள் மற்றும் பக்தர்கள் ஒன்று சேர்ந்து கோவில் வழிபாட்டுக்கும், திருவிழா நடத்துவதற்கும் தேவையான திருப்பணிகளைச் செய்யத் தொடங்கினர்.

அந்தக் குழுவினர், 1963-ம் ஆண்டில் தாமரம்குளங்கரா ஐயப்ப சேவா சமிதி எனும் அமைப்பை உருவாக்கி, கோவில் வழிபாடு மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். அதன் பின்னர், 1984-ம் ஆண்டில் கேரள அரசின் ஊரன்மா தேவஸ்தான வாரியத்திடம் கோவில் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும், கோவில் வழிபாட்டுப் பணிகளைத் தாமரம்குளங்கரா ஐயப்பா சேவா சமிதியினர் தொடர்ந்து செய்து வருகின்றனர் என்று இக்கோவில் அமைந்த தல வரலாறும், அதன் நிர்வாகம் தொடர்புடைய வரலாறும் தெரிவிக்கின்றன.

கோவில் அமைப்பு

சாம்ராவட்டம் சாஸ்தா கோவிலுக்கு இணையானதாகக் கருதப்படும் இந்த ஆலயத்தின் கருவறையில் இருக்கும் சாஸ்தா, இடது காலை மடித்து அமர்ந்த நிலையில், வலது கையில் அமிர்த கலசம் ஒன்றை வைத்திருக்கும் தோற்றத்தில் காட்சி தருகிறார். அதன் காரணமாகவே, இத்தலத்தில் வீற்றிருக்கும் சாஸ்தாவை, தன்வந்திரி பகவானின் மறு தோற்றமாக மக்கள் கருதி வழிபாடு செய்கிறார்கள். இந்த ஆலயத்தின் வளாகத்தில் கணபதி, பத்ரகாளி, நாகராஜா, பிரம்ம ராட்சசன் ஆகியோருக்கு தனித் தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.



இங்கு சாஸ்தா என்று அழைக்கப்படும் ஐயப்பனுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மலையாள நாட்காட்டியின்படி, தை மாதம் முதல் நாளில் மகர விளக்குத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மகரவிளக்கு தினத்திற்கு, ஐந்து நாட்களுக்கு முன்பாகக் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. இந்த விழா தொடர்ச்சியாக ஆறு நாட்கள் வரை நடைபெறுகிறது. பங்குனி மாதம் 11-ம் நாள் கொடிமரம் எழுப்பப்பெற்ற நாளாகவும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திர நாள் ஐயப்பன் அவதரித்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் முதல் நாள் விசுத் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இங்குள்ள பத்ரகாளி அம்மன் சன்னிதியில் நவராத்திரித் திருநாட்களும், கார்த்திகை மாதம் முதல் வெள்ளிக் கிழமை நாளில் களமெழுத்துப் பாட்டு நிகழ்வும் சிறப்பு விழா நாட்களாக அமைந்திருக்கின்றன. இதேபோல், இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மலையாள நாட்காட்டியின்படி கார்த்திகை மாதம் முதல் நாளில் தொடங்கி 41 நாட்கள் மண்டலபூஜை நடத்தப்படுகிறது.

இந்தக் கோவிலில் இருக்கும் சாஸ்தா, தன்வந்திரி பகவானின் மறு தோற்றமாகக் கருதப்படுவதால், இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு உடலில் எந்தவிதமான நோய்கள் இருந்தாலும், அது உடனடியாக நீங்கி நலம் பெறுவர் என்பது ஐதீகம். அதை இங்கு வந்து குணம் பெற்ற பல பக்தர்களும் உறுதிபடுத்துகிறார்கள்.

சாஸ்தாம் பாட்டு

சாஸ்தாம் பாட்டு என்பது கேரளாவின் மத்தியப் பகுதியில் இருக்கும் ஒரு மரபு வழியிலான இசைக்கலை வடிவமாகும். இதனை ஐய்யப்பன் பாட்டு என்றும் சொல்கின்றனர். இந்த இசை நிகழ்வில், ஐயப்பன் பிறப்பு பற்றிய பாடலும், ஐயப்பனைப் போற்றிப் பாடும் பாடல்களும் குழுவாகப் பாடப்படுகின்றன. இப்பாடலுக்கு உடுக்கு எனப்படும் இசைக்கருவியைக் கொண்டு, ஏற்ற இசையை இசைக்கின்றனர். தாமரம்குளங்கரா ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் சனிக்கிழமை நாளில் சாஸ்தாம் பாட்டு நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்த நாளில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

இந்த ஆலயமானது, தினமும் காலை 5 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்


கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், கொச்சியில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது திருப்புனித்துறை திருத்தலம். இங்குள்ள தாமரம்குளங்கரா சாஸ்தா கோவிலுக்குச் செல்ல எர்ணாகுளம், கொச்சி ஆகிய இரண்டு ஊர்களில் இருந்தும் ஏராளமான நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தேனி மு.சுப்பிரமணி. 
Tags:    

Similar News