செய்திகள்
யானை

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் யானை நடமாட்டம்

Published On 2021-04-07 14:48 GMT   |   Update On 2021-04-07 14:48 GMT
கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன் பாளையம் போன்ற பகுதிகளில் ஒற்றை காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

கோவை:

கோவை மாவட்டம் ஆனைகட்டி, பெரியநாயக்கன் பாளையம், மேட்டுப்பாளையம், மதுக்கரை யொட்டிய வனப் பகுதிகளில் அதிகளவில் காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது உணவு, தண்ணீருக்காக ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்கிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம், சிறுமுகை, மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றை காட்டு யானையும், பெரிய நாயக்கன் பாளையத்தில் 2 ஒற்றை ஆண் யானை மற்றும் பெண் யானை ஒன்று குட்டியுடன் சுற்றி திரிகிறது.

இதுதவிர காரமடை பகுதியில் 3 யானைகளும் சுற்றி திரிகின்றன. எனவே வனப்பகுதியையொட்டிய கிராமங்களில் வாழும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் துரை வெங்கடேஷ் கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன் பாளையம் போன்ற பகுதிகளில் ஒற்றை காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

எனவே பெரியநாயக்கன் பாளையம், ஆனைகட்டி, மதுக்கரை உள்பட யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் தனியாக மோட்டார் சைக்கிளில் செல்ல வேண்டாம். தடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில் வசிப்பவர்கள் இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.

இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் யானை நடமாட்டம் இருப்பது தெரிந்தால் வெளியில் செல்வதை தவிர்த்து விடுங்கள். அப்படி செல்வதாக இருந்தாலும் கையில் விளக்குகளை எடுத்து செல்லுங்கள். மேலும் தங்கள் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருந்தால் வன ஊழியர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News