செய்திகள்
கோப்புபடம்

மூலப்பொருட்கள் கிடைக்காமல் தொழில்கள் முடக்கம் - தவிக்கும் மலைவாழ் மக்கள்

Published On 2021-11-24 08:26 GMT   |   Update On 2021-11-24 08:26 GMT
கைவினை பொருட்கள் தயாரிக்க மூலப்பொருளான பட்டுக்கூடுகள் எளிதில் கிடைக்கவில்லை.
உடுமலை:

ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை அமராவதி வனசரகத்திற்குட்பட்ட மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் பெண்களுக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும் வகையில் மத்திய பட்டு வாரியத்தின் சார்பில் சில ஆண்டுகளுக்கு முன் கைவினைப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியளிக்கப்பட்டது. 

பட்டு நூல் உற்பத்தியின் போது வீணாகும் பட்டுக்கூடுகளிலிருந்து அழகிய மாலை, பூ ஜாடி உட்பட பொருட்கள் தயாரிக்க அப்பகுதி பெண்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. இப்பொருட்களுக்கு தேவை அதிகமுள்ளதால் தங்களுக்கு வருவாய் கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் கைவினை பொருட்கள் தயாரிக்க மூலப்பொருளான பட்டுக்கூடுகள் அவர்களுக்கு எளிதில் கிடைக்கவில்லை. 

சில மாதங்கள் கோவையிலுள்ள பட்டு வளர்ச்சித்துறை கொள்முதல் மையத்திலிருந்து வீணாகும் பட்டுக்கூடுகளை பெற்று கைவினைப் பொருட்களை அவர்கள் தயாரித்து வந்தனர். பின்னர் மூலப்பொருள் முற்றிலுமாக கிடைக்காமல் தொழில் முடங்கி விட்டது. 

இதுகுறித்து மலைவாழ் கிராம பெண்கள் கூறியதாவது:

வனப்பகுதியில் வசிக்கும் தங்களுக்கு வருவாய் கிடைக்க பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டாலும் அத்தொழில்களை தொடர்ந்து மேற்கொள்வதில் தொடர் சிக்கல்கள் ஏற்படுகின்றன. பட்டுக்கூடுகளிலிருந்து கைவினைப்பொருட்கள் தயாரிக்க ஆர்வம் உள்ளது. 

வனப்பகுதியிலிருந்து மூலப்பொருளுக்காக கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாது. எனவே ‘ரீலிங்’ மையங்களிலிருந்து வீணாகும் பட்டுக்கூடுகளை உடுமலை பகுதியிலேயே கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு தெரிவித்தனர்.
Tags:    

Similar News