செய்திகள்
தினகரன்

சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்ப்பதாக பொய் பிரசாரம்- தினகரன் குற்றச்சாட்டு

Published On 2019-10-14 10:03 GMT   |   Update On 2019-10-14 10:03 GMT
சிறையில் உள்ள சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்ப்பதாக பொய் பிரசாரம் செய்கிறார்கள் என்று தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பூர்:

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருப்பூர் மாநகர் மாவட்டம், புறநகர் மாவட்டம் மற்றும் ஈரோடு மாநகர் மாவட்டம், புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குன்னத்தூரில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:

நமது கட்சியில் வந்து சேர்ந்து விஸ்வரூபம் எடுத்தவர், பரம்பரை அ.தி.மு.க. காரரானஅவர் தி.மு.க.வில் இணைந்துள்ளார். என்னை தூக்கிப் பிடித்து நிறுத்தியவர்கள் தொண்டர்கள் தான். நமது கட்சியில் இருப்பவர்கள் சுயமாக முடிவு எடுத்து சுய விருப்பத்தில் கட்சியில் இருக்க வேண்டும்.

கட்சிக்கு வேகத்தடையாக இருப்பவர்கள் தான் விலகி சென்றுள்ளார்கள். தூண் எதுவும் சாய்ந்து விட வில்லை. ஒருவரை கட்சியில் இருந்து நீக்குகிறோம் என்றால் முறையாக விசாரித்து அதன் பிறகே நடவடிக்கை எடுக்கிறோம். பின்னால் இருந்து இயக்குவதால் பலர் நம்மிடம் இருந்து பிரிந்து செல்கிறார்கள். 5 பொதுத்தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்கிற அனைத்து சக்தியையும் இறைவன் எனக்கு கொடுத்திருக்கிறார். இன்னும் 20 ஆண்டுகள் உங்களோடு சேர்ந்து உழைக்கும் மன உறுதியையும், உடல் உறுதியையும் கொடுத்திருக்கிறார். இந்த இயக்கம் ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம். 

எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்த இயக்கம் மீட்டெடுக்கப்பட்டு மீண்டும் ஜெயலலிதா வழியில் இந்த இயக்கத்தை செயல்படுத்த உருவாக்கப்பட்ட ஜனநாயக ரீதியான ஆயுதம் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். இன்று ஆட்சியில் இருப்பவர்கள் தேர்தல் வரும்போது நெல்லிக்காய் போல் சிதறி விடுவார்கள். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் ஆக்கி விடுவோம் என்று தற்போது தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். சிறைக்கு சென்று 3 வருடங்கள் ஆகியும் யாராவது அவரை சந்திக்க சென்றீர்களா?. அவருடைய கணவர் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக இருந்த போது பரோலில் வர எதிர்ப்பு தெரிவித்தீர்கள். நடராஜன் மறைவுக்கு யாராவது வந்து அஞ்சலி செலுத்தினார்களா?.


இப்போது சசிகலா சிறையில் இருப்பதால் மக்களை குழப்புவதற்காக, அவரை அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்வதாக, அவரை அசிங்கப்படுத்துவது போல் பேசுகிறார்கள். துரோகம் செய்தவர்களுடன் அவர் எப்படி சேருவார். அமைச்சர் தங்கமணி, தினகரன் எங்களோடு சேர வாய்ப்பு இல்லை என்று கூறியிருக்கிறார். உங்களோடு நாங்கள் சேர வாய்ப்பு இல்லை. ஜெயலலிதாவின் இயக்கத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதால் தான் ஆட்சி, அதிகாரம், வருமானம், பலன் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை உருவாக்கினோம்.

தேர்தல் ஆணையம் நமது இயக்கத்தை நிச்சயம் பதிவு செய்து விரைவில் சின்னம் வழங்கும். உள்ளாட்சி தேர்தலில் நாம் போட்டியிடுவோம் என்று உறுதியுடன் தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News