செய்திகள்
அணை - கோப்புப்படம்

இந்தியா முழுவதும் உள்ள736 அணைகளை வலுப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி - மத்திய மந்திரிசபை ஒப்புதல்

Published On 2020-10-29 20:55 GMT   |   Update On 2020-10-29 20:55 GMT
ரூ.10 ஆயிரத்து 211 கோடி செலவில் இந்தியா முழுவதும் உள்ள 736 அணைகளை வலுப்படுத்தும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
புதுடெல்லி:

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நாட்டில் 5 ஆயிரத்து 334 பெரிய அணைகள் உள்ளன. 80 சதவீத அணைகள், 25 ஆண்டுகள் பழமையானவை. சில அணைகள், 100 ஆண்டுகள் பழமையானவை.

எனவே, அவற்றை நன்கு பராமரிப்பதும், பலப்படுத்துவதும் அவசியம். அதற்காக அணை மறுசீரமைப்பு மற்றும் மேம்படுத்தும் திட்டம் உருவாக்கப்பட்டது.

அதன் முதல்கட்டத்தில், 7 மாநிலங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட 223 அணைகளை மறுசீரமைக்கும் பணி, கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கியது. இந்த ஆண்டு முடிவடைந்தது.

இந்தநிலையில், 2-வது மற்றும் 3-வது கட்டமாக, 19 மாநிலங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட 736 அணைகளை மறுசீரமைக்கும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

ரூ.10 ஆயிரத்து 211 கோடி செலவில், அடுத்த 10 ஆண்டுகளுக்கு இத்திட்டம் மேற்கொள்ளப்படும். இதில், 80 சதவீத நிதியை உலக வங்கியும், மற்றொரு அமைப்பும் அளிக்கும்.

அணைகளில் சுற்றுலா தொடர்பான கட்டமைப்புகளை உருவாக்க மொத்த செலவில் 4 சதவீதத்தை செலவிடவும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

சணல் மூட்டைகளை கட்டாயம் பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 100 சதவீத உணவு தானியங்களையும், 20 சதவீத சர்க்கரையையும் சணல் மூட்டைகளில் அடைத்து வினியோகிப்பதை கட்டாயமாக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

இந்த முடிவு, சணல் தொழிலுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும். கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சணல் பயிரிடும் விவசாயிகளுக்கும், அதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் பலன் அளிக்கும்.

நாட்டின் 85 சதவீத பெட்ரோல் தேவை, இறக்குமதியை சார்ந்தே இருக்கிறது. அதை குறைப்பதற்காக, கரும்பு சாறில் இருந்து எத்தனால் எடுத்து, அதை பெட்ரோலில் 10 சதவீத அளவுக்கு கலந்து வருகிறோம்.

இதன்மூலம் கரும்பு விவசாயிகள் பலன் அடைவதுடன், நமது பெட்ரோல் இறக்குமதி செலவும் குறைகிறது.

அந்தவகையில், எத்தனால் விலையை லிட்டருக்கு ரூ.3.34 வரை உயர்த்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

மருத்துவ துறையில் ஒத்துழைப்பது தொடர்பாக கம்போடியா நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

தாய்-சேய் நலம், குடும்ப கட்டுப்பாடு, எய்ட்ஸ், தொழுநோய், பொது சுகாதாரம், தொற்றுநோய் கட்டுப்பாடு, மருத்துவ ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் இந்த ஒத்துழைப்பு செயல்படுத்தப்படும். கையெழுத்தான நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு இது அமலில் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News