உள்ளூர் செய்திகள்
நகை பறிப்பு

கோவை பீளமேட்டில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2022-04-16 09:53 GMT   |   Update On 2022-04-16 09:53 GMT
கோவையில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை:

கோவை பீளமேடு  பெரிய மாரியம்மன் கோவில் வீதியில் டெய்லர் கடை வைத்து நடத்தி வருபவர் கார்த்தீஸ்வரி (வயது 36). சம்பவத்தன்று இவர்  வழக்கம் போல் தனது கடையில் துணி தைத்து கொண்டிருந்தார். பின்னர் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வாங்குவதற்காக தனது கடையை பூட்டி விட்டு ஸ்கூட்டியில் காந்திமா மார்க்கெட்டிற்கு சென்றார். அங்கு கடையில் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வாங்கிக்கொண்டு ஸ்கூட்டியில் வீடு திரும்பினார்.

ஸ்கூட்டி அங்குள்ள ஒரு சிக்கன் கடை அருகே வந்த போது எதிரே மோட்டார் சைக்கிளில் 2 மர்ம ஆசாமிகள் வந்தனர். அதில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் கண் இமைக்கும் நேரத்தில் கார்த்திஸ்வரி அணிந்திருந்த ரூ.3½ லட்சம் மதிப்பிலான 10½ நகையை பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். அவரின் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வருவதற்குள் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதையடுத்து கார்த்தீஸ்வரி கோவை பீளமேடு போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் கடந்த காலங்களில் பூட்டியிருந்த வீடுகளை குறி வைத்து மர்ம கும்பல்கள் நகை மற்றும் பணத்தை திருடி வந்தன. தற்போது கோவையில் நடந்து மற்றும் ஸ்கூட்டியில் தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து நகை பறிக்கும் சம்பவங்களும் அதிகரித்து உள்ளன. இதேபால் சாலைகளில் செல்லும் பொதுமக்களிடம் மர்ம ஆசாமிகள் செல்போன்களை பறித்து வருகின்றனர். இதுபோன்ற நபர்களை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Tags:    

Similar News