செய்திகள்
போலியோ சொட்டு மருந்து முகாம்.

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்- கலெக்டர் தகவல்

Published On 2020-01-10 10:11 GMT   |   Update On 2020-01-10 10:11 GMT
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ நோய் ஒழிப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் வரும் 19-ந் தேதி அன்று நடைபெற உள்ளது.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் பிரவீன் பி. நாயர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ நோய் ஒழிப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் வரும் 19-ந் தேதி அன்று நடைபெற உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கிராம புறங்களில் 932 ம் நகர்புறங்களில் 95- ம் ஆக மொத்தம் 1027 மையங்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச போலியோ நோய் ஒழிப்பு சொட்டு மருந்து முகாம் 19-ந் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. நகர் மற்றும் கிராமபுறங்களில் 1,44,471 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இவை அனைத்து வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள், பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், தற்காலிகமாக தெரு ஓரங்களில் வசிக்கும் நாடோடிகள், பொம்மை செய்பவர்கள், கட்டிட வேலை மற்றும் செங்கல் சூளைகளில் பணிபுரிபவர்கள் உள்பட பொதுமக்கள் அனைவரின் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது.

விடுபட்ட குழந்தைகளுக்கு மறுநாள் 20-ந் தேதி திங்கள் மற்றும் 21-ந் தேதிகளில் களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து வசதி இல்லாத உட்கிராமங்களுக்கு 11 நடமாடும் வாகனங்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

மேலும், மயிலாடுதுறை, சீர்காழி, நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் நகராட்சி பேருந்து நிலையங்களிலும் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் சீர்காழி புகைவண்டி நிலையங்களிலும் 24 மணி நேரமும் 19- ந்தேதி முதல் 21-ந் தேதி வரை 3 நாட்களிலும் இலவசமாக போலியோ நோய் ஒழிப்பு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

போலியோ சொட்டு மருந்து வழங்கும், ஒவ்வொரு மையத்திலும் 4 களப்பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொது சுகாதாரத்துறை தவிர உள்ளாட்சித்துறை, சமூக நலத்துறை, ஊட்டச்சத்து பணியாளர்கள், பயிற்சி செவிலியர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் என 4,141 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News