ஆன்மிகம்
பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நூதன வழிபாடு

கன்னிவாடி அருகே கோவில் திருவிழா: பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நூதன வழிபாடு

Published On 2020-10-12 04:28 GMT   |   Update On 2020-10-12 04:28 GMT
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே டி.பண்ணைபட்டியில் பிரசித்திபெற்ற மகாலட்சுமி அம்மன் கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நூதன வழிபாடு நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே டி.பண்ணைபட்டியில் பிரசித்திபெற்ற மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை அன்று திருவிழா நடைபெறும்.

அப்போது பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றுவதற்காக அவர்களது தலையில் தேங்காய் உடைத்து நூதன வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை அமராவதி ஆற்றங்கரையில் இருந்து புனிதநீர் குடங்களில் எடுத்து வரப்பட்டது. பின்னர் தீர்த்தக்குடம், முளைப்பாரி உள்ளிட்டவை கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது.

இதைத்தொடர்ந்து நள்ளிரவு 2 மணிக்கு மகாலட்சுமி தாயார் பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். இந்தநிலையில் நேற்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு சக்தி கரகம் எடுத்து வரப்பட்டு, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நூதன வழிபாடு நடந்தது. இந்த திருவிழாவில் டி.பண்ணைப்பட்டியை சுற்றியுள்ள 20 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News