ஆன்மிகம்
பெருமாள் கோவில்களில் பக்தர்கள் இல்லாமல் சொர்க்கவாசல் திறப்பு

சென்னை: பெருமாள் கோவில்களில் பக்தர்கள் இல்லாமல் சொர்க்கவாசல் திறப்பு

Published On 2020-12-25 05:33 GMT   |   Update On 2020-12-25 05:33 GMT
சென்னையில் பெருமாள் கோவில்களில் இல்லாமல் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வழக்கமாக சொர்க்க வாசல் திறப்பின்போது பக்தர்கள் பெருமளவில் திரண்டு சாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் காலை முதல் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை :

வைகுண்ட ஏகாதசி தினமான இன்று பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வழக்கமாக சொர்க்கவாசல் திறப்பின்போது பக்தர்கள் பெருமளவில் திரண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சொர்க்கவாசல் திறப்பின்போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை. முதல் முறையாக பக்தர்கள் இல்லாமல் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை 4.45 மணிக்கு சுவாமி புறப்பாடு நடந்தது. அதை தொடர்ந்து பரமபதவாசல் வழியாக நம்மாழ்வாருக்கு காட்சி தரும் நிகழ்ச்சி நடந்தது.

இதேபோல் அடையாறு அனந்த பத்மநாபசுவாமி கோவில், புரசைவாக்கம் சீனிவாச பெருமாள், சவுகார்பேட்டை பைராகி மடம், பட்டணம் கோவில், மாதவ பெருமாள் கோவில், முல்லாசாகிப் தெரு ரங்கநாத பெருமாள் கோவில், திருநீர்மலை ரங்கநாதர் கோவில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் ஆகிய கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

பார்த்தசாரதி கோவிலில் காலை 6.15 மணி முதல் முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனம் நடந்தது.

இன்று முதல் 10 நாட்கள் ராப்பத்து உற்சவம் நடக்கிறது. ஜனவரி 5-ந் தேதி நம்மாழ்வாருக்கு மோட்சம் அருளல் நடக்கிறது.

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் இன்று இரவு முழுவதும் கண்விழித்து நாளை காலை துளசி தீர்த்தம் குடித்து விரதத்தை முடிப்பார்கள்.

துவாதசி தினமான நாளை ஒருநாள் அனைத்து கோவில்களிலும் பெருமாள் அனந்தசயன திருக்கோல காட்சி நடைபெறும்.

கோயம்பேட்டில் உள்ள மிகவும் பழமையான நித்யகல்யாண பெருமாள் கோவில் வால்மீகி முனிவருக்கு பெருமாள் வைகுண்டத்தில் இருப்பது போல் சீதேவி, பூதேவியுடன் காட்சி கொடுத்த திருத்தலம் என்பது ஐதீகம்.

எனவே இங்கு சொர்க்கவாசல் திறப்பு கிடையாது. இங்கு பெருமாளை தரிசிப்பது தினமும் சொர்க்கவாசலை தரிசிப்பதற்கு இணையானது.

ஏகாதசி தினமான இன்று கருட வாகனத்தில் பெருமாள் தரிசனம் நடந்தது. ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News