செய்திகள்
கலெக்டர் சிவன் அருள்

திருப்பத்தூரில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை தொடக்கம்- கலெக்டர் தகவல்

Published On 2020-09-19 08:44 GMT   |   Update On 2020-09-19 08:44 GMT
வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ள திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்:

வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ள திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எதிர்வரும் வடகிழக்குப் பருவ மழைக்காலத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பொய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது பரவலாக இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இடி, மின்னலுடன் மழை பெய்வதால் மின்னல் தாக்கி உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் இடி, மின்னலின்போது நீர் நிலைகளில் குளிப்பதையும், வெளியில் சுற்றித்திரிவதையும் தவிர்க்க வேண்டும். மரங்களின் கீழ் ஒதுங்குவதைத் தவிர்க்க வேண்டும். மின்வழித்தடங்களின் அருகில் நிற்க கூடாது. கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் கட்டி வைக்க வேண்டும்.

உயர் மின்னழுத்த கம்பங்கள் கீழே விழும் நிலையில் இருந்தாலும், மின்கம்பிகள் தாழ்வாக இருந்தாலும், வீடுகள் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தாலும், பயன்பாட்டில் இல்லாத கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் இருந்தாலும் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.

அந்தக் கட்டுப்பாட்டு அறை 04179-222111, 226666, 223111 ஆகிய தொலைப்பேசி எண்களுடன் இயங்கி வருகிறது. வாட்ஸ் ஆப் எண் 9787885003 மூலமும் மாவட்ட அவசர கால செயல்பாட்டு மையத்துக்கு மழைக்கால இடர்பாடுகள் குறித்துப் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News