செய்திகள்
ஆலந்தூர் தொகுதி

ஆலந்தூர் தொகுதி கண்ணோட்டம்

Published On 2021-03-08 04:49 GMT   |   Update On 2021-03-08 04:49 GMT
தமிழகத்தில் மாபெரும் அரசியல் சக்தியாக திகழ்ந்த எம்.ஜி.ஆரை உருவாக்கிய தொகுதி என்ற பெருமை ஆலந்தூர் தொகுதிக்கு உண்டு.
இந்த தொகுதியில் எம்.ஜி.ஆர். 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் போட்டியிடும்போது ஆலந்தூர் தொகுதி பரங்கிமலை என்ற பெயரில் இருந்தது.

ஆலந்தூர் தொகுதி இதற்கு முன் சைதாப்பேட்டை தொகுதியாக இருந்து பரங்கிமலை தொகுதியாக மாறி பின் ஆலந்தூர் தொகுதியாக உருவாக்கப்பட்டது.

பரங்கிமலை தொகுதியாக இருக்கும்போது வடபழனி, கே.கே.நகர், ஈக்காடுதாங்கல், ஜாபர்கான்பேட்டை, குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம், ராமாபுரம், பரங்கிமலை, ஆலந்தூர் என ஒருங்கிணைந்த தொகுதியாக இருந்தது.



தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் சீரமைக்கும் பொழுது, கடந்த 1977-ம் ஆண்டில் இருந்து பரங்கிமலை தொகுதியை பிரித்து எம்.ஜி.ஆர். நகர், கே.கே.நகர், பல்லாவரம், மீனம்பாக்கம், ஆலந்தூர், மணப்பாக்கம், மவுலிவாக்கம், நந்தம்பாக்கம், குன்றத்தூர், ஐயப்பன்தாங்கல் வரை உள்ள பகுதிகளை சேர்த்து உருவாக்கப்பட்டது.

2011-ல் பல்லாவரம், எம்.ஜி.ஆர். நகர், கே.கே. நகர் ஆகிய பகுதிகளை பிரித்து ஆலந்தூர் மணப்பாக்கம், மவுலிவாக்கம், நந்தம்பாக்கம், பரங்கிமலை, குன்றத்தூர், ஐயப்பன்தாங்கல் கொண்டு மீண்டும் தொகுதி வரையறுக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் 12-வது மண்டலமாக இருக்கக்கூடியது. ஆலந்தூர் மாநகராட்சி, இதற்கு முன் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட ஆலந்தூர் நகராட்சி ஆக செயல்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியை விரிவு படுத்தி 200 வார்டுகளாக மாற்றும்போது, ஆலந்தூர் நகராட்சி, மாநகராட்சியாக மாற்றி அமைக்கப்பட்டது.



இத்தொகுதியில் மாநகராட்சி பகுதி உட்பட 10 பஞ்சாயத்துக்கள், 2 ஒன்றியம் உள்ளது. இங்கு அ.தி.மு.க. 7 தடவையும், தி.மு.க. 8 தடவையும், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த தே.மு.தி.க. ஒரு தடவையும் வெற்றி பெற்றுள்ளது.

ஆலந்தூர் தொகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க புனித தோமையார் மலை அமைந்துள்ளது. இது தேசிய புனித தலத்தில் ஒன்று. இது ஆலந்தூர் தொகுதி என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது. ஆலந்தூர் தொகுதியின் ஒரு சிறப்பு அம்சமாக இருக்கக்கூடியது, சென்னை மாநகரில் முதன் முதலில் மெட்ரோ ரெயில் சேவை ஆலந்தூரில் இருந்து கோயம்பேடுக்கு தொடங்கப்பட்டதுதான்.

ஆலந்தூர் தொகுதியை பொருத்தமட்டில் சுமார் 54 வருடமாக தி.மு.க., அ.தி.மு.க. மட்டும்தான் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. ஆலந்தூர் தொகுதியில் பெரும்பாலானோர் ஆதிதிராவிட மக்கள், அதற்குப்பின்தான் வன்னியர்கள், பிராமணர்கள், நாடார்கள் போன்ற சமூகத்தினர் உள்ளனர்.

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் பரவலாக அனைத்து பகுதியிலும் இருந்தாலும், குறிப்பாக ஆலந்தூர் பகுதியில் மட்டும் இஸ்லாமியர்கள்தான் அதிகம் என்று சொல்லலாம். ஆனால் தொகுதியில் பெரும்பாலானோர் இந்து மதத்தை சார்ந்தவர்கள்தான்.

தற்போது ஆலந்தூர் தொகுதியில் இருக்கக் கூடியவர்களில் சுமார் 70 சதவீதத்துக்கு மேல் கல்வி பெற்றவர்கள். ஆனால் வேலைவாய்ப்பில் பின்தங்கிய தொகுதியாக இன்றும் இருந்து வருகிறது. ஆலந்தூர் தொகுதியை பொறுத்த மட்டும் பெரிய தொழிற்சாலைகளோ, அரசு கலை கல்லூரிகளோ இல்லை.

கோரிக்கைகள்

தமிழ்நாட்டிலேயே வீட்டு வரி அதிகமாக செலுத்தும் ஒரே பகுதி ஆலந்தூர் பகுதி. ஆலந்தூர் நகராட்சியாக இருக்கும் பொழுது ஏற்றப்பட்ட வரி மாநகராட்சியாக மாறியும் அதனுடைய வரி விதிப்பு சதவீதத்தை குறைக்கவில்லை. இந்த வரிச்சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆலந்தூர் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.



மேலும் ஆதம்பாக்கம் பகுதியில் மின்சார சப்ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என்பது சுமார் 15 வருடத்திற்கு மேலாக அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

அதேபோல் வணிக ரீதியாக ஆலந்தூர் மார்க்கெட் வியாபாரிகளின் நீண்டநாள் கோரிக்கையாக இருப்பது, ஆலந்தூரில் புதுப்பேட்டை தெருவில் இருந்து ரெயில்வே கேட்டை கடக்கும் வகையில் ஆதம்பாக்கம் மஸ்தான் கோரி தெருவுக்கு ரெயில்வே சுரங்கப் பாதையோ அல்லது மேம்பாலமோ அமைக்க வேண்டும் என்று சுமார் 11 வருடத்திற்கு மேலாக கோரிக்கை வைத்துள்ளனர்.



ஏற்கனவே வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று இந்த பகுதியில் சுரங்கபாதை அமைக்கலாம் என்று ரூ.3 கோடி நிதியை மாநகராட்சி ஒதுக்கியது. அதற்கு ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்தது.

ஆனால் குடிநீர் குழாய்கள் செல்வதால் அது சாத்தியமில்லை என்று குடிநீர் வாரியம் அனுமதி மறுக்க அத்திட்டம் கைவிடப்பட்டு, அதே நிதிக்கு சிறிய ரக வாகனங்கள் மட்டும் செல்லும்படியான மேம்பாலம் அமைக்கலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் இன்றுவரை அத்திட்டம் கிடப்பில் இருக்கிறது. இதை துரிதமாக முடித்து தரும்படி ஆலந்தூர் மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுவரை வெற்றி விவரம்:-

1962- முனுஆதி (தி.மு.க) 
1967- எம்.ஜி.ஆர். (தி.மு.க) 
1971- எம்.ஜி.ஆர். (தி.மு.க) 
1977- அப்துல் ரசாக் (அ.தி.மு.க) அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு
1980- அப்துல் ரசாக் (அ.தி.மு.க) 
1984- மீ.ஆபிரகாம் (தி.மு.க) 
1989- கன்டோன்மென்ட் சண்முகம் (தி.மு.க) 
1991- அண்ணாமலை (அ.தி.மு.க) 
1996- கன்டோன்மென்ட் சண்முகம் (தி.மு.க)
2001- பா.வளர்மதி (அ.தி.மு.க) 
2006- த.மோ.அன்பரசன் (தி.மு.க) 
2011- பண்ருட்டி ராமச்சந்திரன் (தே.மு.தி.க&அ.தி.மு.க. கூட்டணி
2014 வெங்கட்ராமன் (அ.தி.மு.க) (இடைத்தேர்தல்)
2016 தா.மோ.அன்பரசன் (தி.மு.க)
Tags:    

Similar News