செய்திகள்
அமித் ஷா

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தின் மிகப்பெரிய சாதனை இதுதான் -அமித் ஷா பாராட்டு

Published On 2021-10-29 11:04 GMT   |   Update On 2021-10-29 11:04 GMT
ஐந்து ஆண்டுகளாக வீட்டில் அமர்ந்திருந்தவர்கள் இப்போது புதிய ஆடைகளை தைத்து அணிந்துகொண்டு மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று கூறுவதாக அகிலேஷ் யாதவை அமித் ஷா விமர்சித்தார்.
லக்னோ:

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று உத்தர பிரதேசத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், 2017 பாஜக தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை நிறைவேற்றியிருப்பதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களை வெகுவாகப் பாராட்டினார்.  

வரும் மாதங்களில் 100 சதவீத இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என யோகி ஆத்தியநாத்திடம் கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் பாஜக எதைச் சொன்னாலும் அதை நிறைவேற்றும் என்று மக்கள் நம்புவார்கள் என்றும் அமித் ஷா  குறிப்பிட்டார்.

அமித் ஷா மேலும் பேசியதாவது:-

உத்தர பிரதேசத்தில் இருந்து மாபியா கும்பலை ஒழித்திருப்பது யோகி ஆதித்யநாத் அரசின் மிகப்பெரிய சாதனையாகும். அனைத்து நிலைகளிலும் மாநிலம் குறிப்படத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால், உத்தரபிரதேசத்தை நம்பர்-1 மாநிலமாக மாற்ற இன்னும் ஐந்து ஆண்டுகள் நமக்குத் தேவை. அதுமட்டுமின்றி, 2022-ம் ஆண்டின் சட்டமன்ற தேர்தல் முடிவானது, 2024-ல் மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கான அடித்தளத்தையும் அமைக்கும்.

ஐந்தாண்டுகளாக வீட்டில் அமர்ந்திருந்தவர்கள் இப்போது புதிய ஆடைகளை தைத்து அணிந்துகொண்டு மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று கூறுகிறார்கள். அகிலேஷ் யாதவிடம் அவர் எத்தனை நாட்கள் வெளிநாட்டில் இருந்தார் என்று கேட்க விரும்புகிறேன். உத்தர பிரதேச மாநிலம் கொரோனா பாதிப்பு மற்றும் வெள்ளத்தை எதிர்கொண்ட போது அவர் எங்கே இருந்தார்? இவர்கள் தங்கள் குடும்பத்திற்காகவும், தங்கள் சாதிக்காகவும் அரசாங்கம் நடத்தினார்கள். யோகி ஆதித்யநாத்தின் அரசாங்கம் அனைவருக்குமானது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News