செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுகாதார ஆய்வாளர்கள்.

திருப்பூரில் சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2021-11-30 09:58 GMT   |   Update On 2021-11-30 09:58 GMT
மாநிலம் தழுவிய அளவில் அனைத்து சுகாதார மாவட்ட துணை இயக்குனர் அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு உள்ளது.
திருப்பூர்:

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வாழ்வாதார கோரிக்கைக்காக போராடிய 1646 சுகாதார ஆய்வாளர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து  பூலுவப்பட்டியில் உள்ள துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் முன்பு சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:-

கொரோனா பெருந்தொற்று காலத்தில் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில்  1646 சுகாதாரஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போதைய தி.மு.க. அரசு அவர்கள் அனைவரையும் ஒப்பந்த அடிப்படையில் நேரடியாக பணிக்கு எடுத்து கொண்டு மாத ஊதியமாக ரூ.20ஆயிரம் வழங்கி  வருகிறது. அந்த ஊதியமும் போராடி பெறுகின்ற சூழ்நிலை   உள்ளது.

இந்தநிலையில் மேலும் பேரிடியாக அரசாணை 516ன்படி 1646 சுகாதார ஆய்வாளர்களையும் வீட்டிற்கு அனுப்பி விட்டு ரூ.11ஆயிரம் தொகுப்பூதியத்தில் 2448 சுகாதார ஆய்வாளர்களை தேர்வின் மூலமாக   தேர்ந்தெடுக்க அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தில் உயிரை பொருட்படுத்தாமல் கடுமையாக பணியாற்றிய சுகாதார ஆய்வாளர்கள் தற்போது பணி பாதுகாப்பும், பணி நிரந்தரமும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதால்  மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக முதல்வரை சந்திக்க சென்னையில் டி.எம்.எஸ். அலுவலகத்திற்கு சென்ற போது சுகாதார ஆய்வாளர்களை பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்காமல் கைது செய்துள்ளனர். இதனை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் அனைத்து சுகாதார மாவட்ட துணை இயக்குனர் அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு உள்ளது என்றனர்.
Tags:    

Similar News