ஆன்மிகம்
விராலிமலை சுப்பிரமணிய சுவாமிகோவிலில் யாகசாலை பூஜை நடைபெற்றதை படத்தில் காணலாம்.

விராலிமலையில் மலைமேல் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

Published On 2021-02-25 04:10 GMT   |   Update On 2021-02-25 04:10 GMT
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் மலை மேல் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன் வள்ளி- தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும் முருகன் அருணகிரிநாதருக்கு காட்சி தந்து அவருக்கு அஷ்டமாசித்தி வழங்கிய இடமாகவும் விளங்கி வருகிறது. இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய திருப்பணி குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகம் முடிவு செய்து கடந்த 2018-ம் ஆண்டு பாலாலயம் நடத்தப்பட்டது. மேலும் தற்போது புனரமைப்பு பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விக்னேஷ்வர பூஜையுடன் விழா தொடங்கியது.

கடந்த 22-ந்தேதி காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. பின்னர் விமான கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்று மாலை முதற்கால யாக பூஜையுடன் விழா தொடங்கியது. 23-ந்தேதி 2- ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜையும் தொடங்கி நடைபெற்றது. நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜை தொடங்கி பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) காலையில் 6-ம் கால யாக சாலை பூஜை நடக்கிறது.தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி கோவில் விமான கலசம், ராஜ கோபுர கலசத்திற்கும் புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் சுப்பிரமணிய சுவாமி மூலவருக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.
Tags:    

Similar News