செய்திகள்
கோப்புபடம்

புத்துயிர் பெறும் இலவச கலர் டி.வி.க்கள்

Published On 2021-09-16 06:26 GMT   |   Update On 2021-09-16 06:26 GMT
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க., ஆட்சி அமைந்த போது கலர் ‘டி.வி.க்கள் ஓரம் கட்டி வைக்கப்பட்டன.
திருப்பூர்:

தி.மு.க., ஆட்சிப்பொறுப்பில் இருந்த போது தமிழக அரசு சார்பில் 2006-11ம் ஆண்டில் இலவச கலர் ‘டி.வி.,’ வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 2011ல் மாநகராட்சி வார்டுகளில் டி.வி.,வழங்கி முடிப்பதற்குள் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சியின் பெரிய வார்டு மக்களுக்கு ‘டோக்கன்’ மட்டும் வழங்கப்பட்டது. டி.வி., கிடைக்கவில்லை.ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க., ஆட்சி அமைந்த போது கலர் ‘டி.வி.க்கள் ஓரம் கட்டி வைக்கப்பட்டன.

கலெக்டர் அலுவலகம், பள்ளி, கல்லூரிகளில் வழங்கப்படாத ‘டி.வி.,க்கள் கிடப்பில் வைத்து பூட்டப்பட்டன. தி.மு.க., ஆட்சி, 100 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் நல்ல நிலையில் உள்ள கலர் டி.வி.க்களை கண்டறிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாநகராட்சி, நகராட்சிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள கலர் டி.வி.க்களை வருவாய்த்துறையினர் மெக்கானிக்குகளுடன் சென்று 10 ஆண்டுக்கும் மேலாக தூசி படர்ந்து கிடக்கும் டி.வி., பெட்டிகளை எடுத்து சரிபார்த்து வருகின்றனர். 

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில்:

இருப்பு வைக்கப்பட்டுள்ள டி.வி.க்களை சரிபார்த்து இயங்கும் நிலையில் உள்ள டி.வி.க்களை கண்டறிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நல்ல நிலையில் உள்ள டி.வி.க்கள் அரசுத்துறை அலுவலகங்களுக்கு வழங்கப்பட உள்ளது என்றனர்.
Tags:    

Similar News