செய்திகள்
ஜேபி நட்டா

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா-வுக்கு கொரோனா

Published On 2020-12-13 12:57 GMT   |   Update On 2020-12-13 12:57 GMT
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா-வுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
 
இந்தியாவில் தினமும் சராசரியாக 30 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிவருகிறது. வைரஸ் பரவலால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். 

இதற்கிடையில், கொரோனா பாதிப்பிற்கு பல்வேறு மாநிலங்களில் முதல்மந்திரிகள், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்களும் இலக்காகி வருகின்றனர்.

அந்த வரிசையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரும் இணைந்துள்ளார். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா-வுக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோன வைரஸ் பாதிப்பு சிறிய அளவில் உள்ளதால் வீட்டிலேயே தனிமைபடுத்திக்கொண்டுள்ளதாக நட்டா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜேபி நட்டா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

கொரோனாவுக்கான தொடக்க அறிகுறிகள் இருந்ததால் நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். பரிசோதனையில் எனக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நான் உடல்நலத்துட உள்ளேன். மருத்துவர்களின் அறிவுரை படி நான் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைபடுத்திக்கொண்டு கொரோனா பரிசோதனையை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

என தெரிவித்துள்ளார்.

ஜேபி நட்டா கடந்த 10-ம் தேதி மேற்குவங்காள மாநிலத்திற்கு சென்று அங்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அந்த பிரசாரத்தின்போது அவர் பயணித்த வாகனம் மர்மநபர்களால் கல்வீசி தாக்கப்பட்டது.

இந்நிலையில், ஜேபி நட்டா இம்மாத இறுதியில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக தமிழகம் வர திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News