செய்திகள்
நகை பறிப்பு

சுவாமிமலை அருகே பெட்டிக்கடை பெண் வியாபாரியிடம் நகை பறித்த கொள்ளையன் கைது

Published On 2019-10-12 04:49 GMT   |   Update On 2019-10-12 11:37 GMT
சுவாமிமலை அருகே பெட்டிக்கடை பெண் வியாபாரியிடம் நகை பறித்த கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுவாமிமலை:

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள திருப்புறம்பியம் சந்துத் தெருவைச் சேர்ந்தவர் யசோதா (வயது 65). இவர் தனது வீட்டு வாசலில் சிறிய பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் யசோதாவின் கடை வாசலில் வாகனத்தை நிறுத்தி ஹெல்மெட்டை கழற்றாமல் யசோதாவிடம் கடலைமிட்டாய் தருமாறு கேட்டுள்ளார். அதன்படி கடலைமிட்டாய் கொடுத்து அதற்குரிய தொகையை யசோதா கேட்டபோது பாக்கெட்டில் பணம் எடுப்பதுபோல் பாவனை செய்து கடைக்குள் நின்றிருந்த யசோதாவின் கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்கச் செயினை பறித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த யசோதா திருடன் திருடன் என கூச்சல் போட்டுள்ளார்.

அந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் அந்த நபர் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாக தப்பி சென்றுவிட்டார். செயினை பறித்து சென்ற மர்ம நபர் ஹெல்மெட்டை கழற்றாததால் அந்த நபர் குறித்து அடையாளங்கள் யசோதாவிற்கு தெரிய வில்லை.

இதுகுறித்து யசோதா கொடுத்த புகாரின்பேரில் சுவாமிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை பறித்துசென்ற ஹெல்மெட் கொள்ளையனை தீவிரமாக தேடிவந்தனர்.

இது தொடர்பாக திருவிடை மருதூர் கீழபட்டக்கால் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன்(29) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் யசோதாவிடம் நகை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து ராமகிருஷ்ணனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் யசோதையிடம் கொள்ளையடிக்கப்பட்ட தங்கச் செயின் ஆகியவற்றை கைப்பற்றினர். மேலும் ராமகிருஷ்ணனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News