ஆன்மிகம்
தேவிரம்மா கோவிலில் மேளம் அடித்ததும் நடை கதவு தானாக திறந்தது

தேவிரம்மா கோவிலில் மேளம் அடித்ததும் நடை கதவு தானாக திறந்தது

Published On 2019-10-29 06:17 GMT   |   Update On 2019-10-29 06:17 GMT
சிக்கமகளூரு பிண்டுகா மலையில் உள்ள தேவிரம்மா கோவில் நடை கதவு மேளம் அடித்ததும் தானாக திறந்தது. இந்த அபூர்வ நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிக்கமகளூரு மாவட்டம் மல்லேனஹள்ளியில் பிண்டுகா மலை உள்ளது. இந்த மலையின் உச்சியில் தேவிரம்மா கோவில் உள்ளது. தீபாவளியையொட்டி இந்த கோவிலில் தீப திருவிழா நடக்கும். அதுபோல் தீபாவளியை முன்னிட்டு தீப திருவிழா ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்த நிலையில் சிக்கமகளூருவில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்ட கலெக்டர் பகாதி கவுதம் கடந்த 26-ந் தேதி மலை ஏறுவதற்கு தடை விதித்து இருந்தார். இதையும் மீறி நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் மலை ஏற தொடங்கினார்கள்.

இதனால் நேற்று முன்தினம் மலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்களாக காணப்பட்டனர். தீபாவளியை முன்னிட்டு இரவு தேவிரம்மா கோவில் முன்பு தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கோவிலில் நடை கதவு திறப்பது ஒரு சிறப்பம்சம் ஆகும். அதாவது மேளம் அடித்தால் தான் நடை தானாக திறக்கும். அப்போது தேவிரம்மாவை வழிபட்டால் வாழ்வில் அனைத்து பாக்கியமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் ஐதீகமாக உள்ளது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த நிகழ்வை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். நேற்று காலை 6 மணி அளவில் மேளம் இசைக்கப்பட்டது. உடனே கோவில் நடை கதவு தானாக திறந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் தேவிரம்மா.... தேவிரம்மா... என மன உருகி சாமி தரிசனம் செய்தனர்.

அதைதொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. மாலை வரை பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்தபடி இருந்தனர். சுமார் 3 ஆயிரம் பேர் நேற்று மட்டும் சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அதுபோல் மாநில சுற்றுலாத் துறை மந்திரி சி.டி.ரவி நேற்று கோவிலுக்கு சென்று தேவிரம்மாவுக்கு சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார்.

இதை தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) பல்லக்கு ஊர்வலம் நடக்கிறது. அதன் பிறகு தீமிதி நிகழ்ச்சியும் நடைபெறும். திருவிழாவையொட்டி சிக்கமகளூரு, பாலேஹொன்னூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மல்லேனஹள்ளிக்கு கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன.

மேலும் இதையொட்டி பிண்டுகா மலை அடிவாரம் மற்றும் மலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளன.
Tags:    

Similar News