லைஃப்ஸ்டைல்
பள்ளிகளும்.. சுகாதார குறைபாடுகளும்..

பள்ளிகளும்.. சுகாதார குறைபாடுகளும்..

Published On 2020-10-22 03:43 GMT   |   Update On 2020-10-22 03:43 GMT
கொரோனா வைரஸ் பீதியால் பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவதற்கு பல பெற்றோர் தயக்கம் காட்டும் நிலையில் கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படாததும், கை கழுவுவதற்கு தண்ணீர் வசதி இல்லாததும் கவனிக்கத்தகுந்த விஷயமாக இருக்கிறது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தாமதமாகிக்கொண்டிருக்கிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்து சுகாதாரமாக இருப்பதும் கொரோனாவிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறையாக பின்பற்றப்படுகின்றன. இந்தநிலையில் 15 மாநிலங்களில் உள்ள பல பள்ளிகளில் கை கழுவும் வசதியும், முறையான கழிவறை வசதியும் இல்லாத தகவல் வெளியாகி இருக்கிறது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய தணிக்கை வாரியத்தின் (சி.ஏ.ஜி) அறிக்கையில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தண்ணீர் பற்றாக்குறை, மோசமான பராமரிப்பு, பெண் குழந்தைகளுக்கு தனி கழிவறை வசதி இல்லாதது, கழிவறையில் கை கழுவும் வசதி இல்லாதது போன்றவை இந்த அறிக்கையில் முக்கிய சாராம்சமாக இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக 15 மாநிலங்களில் உள்ள 2,048 பள்ளிக்கூடங்களில் 2,695 கழிவறைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் ஆண்-பெண்கள் இருபாலரும் படிக்கும் 1,967 பள்ளிக்கூடங்களில் 99 பள்ளிகளில் கழிப்பறைகள் செயல்பாட்டில் இல்லாதது தெரியவந்துள்ளது. 436 பள்ளிக்கூடங்களில் ஆண்-பெண் இருபாலரில் ஒருவர் மட்டுமே உபயோகிக்கும் வகையிலான கழிவறைகள் அமைந்திருக்கின்றன.

சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு தனி கழிப்பறைகளை அமைக்கும் நோக்கம் 535 பள்ளிகளில் நிறைவேற்றப்படவில்லை. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 27 சதவீத பள்ளிகளில் இந்த நிலைதான் நீடிக்கிறது. மேலும் 72 சதவீத கழிப்பறைகளில் தண்ணீர் வசதியே இல்லாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது. அதுபோல் 55 சதவீத கழிவறைகளில் கை கழுவுவதற்கான வசதியும் ஏற்படுத்தப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

கழிவறை கட்டுமானத்தில் குறைபாடு, போதிய பராமரிப்பின்மை, கழிவறை வாசலில் படிக்கட்டுகள் இல்லாதது, படிக்கட்டுகள் இருந்தாலும் சேதமடைந்து இருப்பது போன்ற குறைபாடுகளும் இருக்கின்றன. அதாவது 1,812 கழிவறைகளில் முறையான பராமரிப்பு, சுகாதார வசதி இல்லை. வாரத்தில் ஒரு நாளோ அல்லது மாதத்தில் ஒரு நாளோதான் கழிவறைகள் சுத்தப்படுத்தப்படுவதும் தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கழிவறைகளை தூய்மையாக பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சி.ஏ.ஜி பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பீதியால் பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவதற்கு பல பெற்றோர் தயக்கம் காட்டும் நிலையில் கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படாததும், கை கழுவுவதற்கு தண்ணீர் வசதி இல்லாததும் கவனிக்கத்தகுந்த விஷயமாக இருக்கிறது.
Tags:    

Similar News