செய்திகள்
மேட்டூர் அணை

108 அடியை எட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம்

Published On 2019-08-14 04:53 GMT   |   Update On 2019-08-14 04:53 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று காலை 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்ததால் அணை நீர்மட்டம் நேற்றிரவு 104 அடியாகவும் இன்று காலை 107.75 அடியாகவும் உயர்ந்தது. பிற்பகலுக்குள் 108 அடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர்:

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது. இதையடுத்து பாதுகாப்பு கருதி 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அதிக பட்சமாக 3 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒகேனக்கலில் அருவிகளே தெரியாத அளவுக்கு பாறைகளை மூழ்கடித்து வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. கடந்த 9-ந் தேதி முதல் அதிக அளவு தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்ததால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது. இதனால் 9-ந்தேதி 54 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று அதிகாலை 100 அடியை தாண்டியது.

மேட்டூர் அணைக்கு நேற்று காலை 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்ததால் அணை நீர்மட்டம் நேற்றிரவு 104 அடியாகவும் இன்று காலை 107.75 அடியாகவும் உயர்ந்தது. பிற்பகல் 108 அடியை தாண்டியது. 5 நாட்களில் 54 அடி நீர்மட்டம் உயர்ந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டது. இன்று கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 29 ஆயிரத்து 517 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 32 ஆயிரத்து 708 கன அடி தண்ணீரும் என மொத்தம் 62 ஆயிரத்து 225 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது.

தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் இன்று காலை 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து 50 ஆயிரம் கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 10 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்காக 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

இன்று அல்லது நாளை மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்த்த நிலையில் அணைக்கு நீ ர்வரத்து குறைய தொடங்கி உள்ளதால் அணை நீர்மட்டம் தற்போது மெதுவாக உயர தொடங்கி உள்ளது. இதே நிலை நீடித்தால் முழு கொள்ளளவை எட்ட இன்னும் சில நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கேரள மாநிலம் மலப்புரம், கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது.

இதனால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே கபினி அணை நிரம்பி இருப்பதால் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும். இதனால் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதற்கான சூழ்நிலை உருவாகும்.
Tags:    

Similar News