செய்திகள்
மராட்டிய மந்திரி சஞ்சய் ரதோட்

இளம்பெண் மரண சர்ச்சையில் சிக்கிய மராட்டிய மந்திரி திடீர் ராஜினாமா

Published On 2021-02-28 19:40 GMT   |   Update On 2021-02-28 19:40 GMT
இளம்பெண் மரண சர்ச்சையில் சிக்கிய மராட்டிய மந்திரி சஞ்சய் ரதோட் தனது மந்திரி பதவியை திடீரென ராஜினாமா செய்து உள்ளார்.
மும்பை:


மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் பூஜா சவான்(வயது23). டிக்-டாக் பிரபலமான இவர், கடந்த மாதம் 8-ந் தேதி புனே ஹடாப்சரில் உள்ள கட்டிடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தார். இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இளம்பெண் மரணத்துக்கும், மாநில வனத்துறை மந்திரி சஞ்சய் ரதோட்டிற்கும் தொடர்பு இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவின. மேலும் இதுதொடர்பான உரையாடல்கள், மந்திரியுடன் இளம்பெண் எடுத்துக்கொண்ட படங்களும் ‘வைரல்’ ஆகின.

இதையடுத்து சஞ்சய் ரதோட் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியான பா.ஜனதா வலியுறுத்தியது.

மேலும் அந்த கட்சியினர் நேற்றுமுன்தினம் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல சஞ்சய் ரதோட்டின் மந்திரி பதவி பறிக்கப்படவில்லை எனில் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த விடமாட்டோம் என பா.ஜனதா மிரட்டல் விடுத்து இருந்தது.

இந்தநிலையில் மந்திரி சஞ்சய் ரதோட் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த அவர், தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக நிருபர்களிடம் கூறினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இளம்பெண் பூஜா சவான் மரணத்தை வைத்து பெரிய அளவில் அழுக்கு அரசியல் செய்யப்படுகிறது. சுதந்திரமான, நியாயமான விசாரணை நடந்து உண்மை வெளியே வர வேண்டும் என்பதற்காக எனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News