செய்திகள்
கோப்புபடம்

மருத்துவ பணியாளர்கள் தாக்கப்படுவதை கண்டித்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2021-06-19 15:28 GMT   |   Update On 2021-06-19 15:28 GMT
மருத்துவ பணியாளர்கள் தாக்கப்படுவதை கண்டித்து நாகர்கோவிலில் நேற்று டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்:

நாடு முழுவதும் கொரோனா முதல் அலை மற்றும் 2-ம் அலையில் ஆயிரத்துக்கும் அதிகமான டாக்டர்கள் உயிரிழந்து உள்ளனர். கொரோனா பரவும் ஆபத்தான நிலையிலும் மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை தாக்கும் சம்பவங்கள் வட மாநிலங்களில் நடந்து வருகிறது. இதற்கு நாடு முழுவதும் டாக்டர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் டாக்டர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக அமல்படுத்த கோரியும் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.

இதே போல் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தப் போராட்டமானது ஆஸ்பத்திரி வளாகத்தில் நடத்தப்பட்டது. நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிறிது நேரம் மட்டும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு சுரேஷ் பாலன் தலைமை தாங்கினார்.

இந்திய மருத்துவர் சங்க மாவட்ட தலைவர் பிரவீன், டாக்டர்கள் அனுப், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Tags:    

Similar News