செய்திகள்
சிவகாசி பஸ்நிலையத்தில் மழைநீர் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.

தொடர் மழையால் தெப்பக்குளமான சிவகாசி பஸ் நிலையம்- பயணிகள் கடும் அவதி

Published On 2020-11-19 14:33 GMT   |   Update On 2020-11-19 14:33 GMT
சிவகாசி பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் பஸ் நிலையம் உள்ளிட்ட பல இடங்கள் போதிய வாருகால் இல்லாததால் தெப்பக்குளம் போல் காட்சி அளிக்கிறது.
சிவகாசி:

சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை தொடர்ந்து மழை பெய்ததால் சிவகாசி, திருத்தங்கல் நகரங்களிலும் மற்றும் ஊரக பகுதியிலும் மழை நீர் பல இடங்களில் தேங்கி கிடந்தது.

இதனால் அந்த பகுதிகளை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். அதிலும் குறிப்பாக சிவகாசி பஸ் நிலையத்தில் மழைநீர் தெப்பம் போல் தேங்கி இருந்ததால் பஸ் நிலையத்துக்குள் வந்த பயணிகள் பெரும் சிரமம் அடைந்தனர். அம்மா குடிநீர் விற்பனை நிலையம் அருகில் தண்ணீர் தேங்கி இருந்ததால் மதுரை செல்லும் பஸ்சில் செல்ல வந்த பயணிகள் பெரும் சிரமம் அடைந்தனர். சிவகாசி பஸ் நிலையம் அருகில் உள்ள சாலை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் புதிதாக போடப்பட்டது. இதனால் அந்த பகுதி உயரமாக மாறியது. சாலையில் கொட்டிய மழை நீர் அனைத்தும் பஸ் நிலையத்துக்குள் வந்து தேங்கி உள்ளது. பஸ் நிலையம் மிகவும் தாழ்வான பகுதியாக இருப்பதால் மழைநீர் தேங்கி, தெப்பக்குளம் போல் காட்சி அளிக்கிறது. பஸ் நிலையத்தில் இருந்து மழைநீர் வெளியேற போதிய வாருகால் வசதி இல்லாதது தான் காரணம்.

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட விஸ்வநத்தம் கவிதா நகரில் மழைநீர் தேங்கி இருப்பதாக தினத்தந்தியில் செய்தி வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதியில் ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து பழைய தாயில்பட்டி சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பகுதி மக்களிடம் உறுதி அளித்தனர். 

இதே போல் சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள ஜக்கம்மாள் கோவில் அருகில் பழுதாகி உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இங்குள்ள ராட்சத பள்ளங்களில் மழைநீர் தேங்கி இருக்கும் போது பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறி பள்ளத்தில் விழும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் இந்த பகுதியை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News