செய்திகள்
கொடைக்கானலில் விற்பனையாகாமல் தேங்கியுள்ள ரம்புட்டான் பழங்கள்.

கொடைக்கானலில் தேக்கமடைந்த ரம்புட்டான் பழங்கள்

Published On 2021-09-09 09:42 GMT   |   Update On 2021-09-09 09:42 GMT
நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் பழங்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கொடைக்கானலில் பிரசித்தி பெற்ற ரம்புட்டான் பழங்கள் அதிகளவில் தேக்கமடைந்துள்ளன.
கொடைக்கானல்:

கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வவ்வால் கடித்த ரம்புட்டான் பழத்தை சாப்பிட்ட சிறுவன் பலியானதாக தெரிய வந்தது. மேலும் சிறுவனின் பெற்றோருக்கும் நிபா வைரஸ் அறிகுறி உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் குடியிருப்பு பகுதி தனிமைபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் ரம்புட்டான் பழங்களுக்கு அம்மாநில சுகாதாரத்துறையினர் தடை விதித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிளம்ஸ் பழங்களைப் போன்றே ரம்புட்டான் பழங்களும் அதிக அளவு விற்கப்பட்டு வருகிறது.

தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கொடைக்கானலுக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளும் இந்த பழங்களை வாங்கி உண்ண அச்சமடைந்துள்ளனர்.

சாதாரணமாக கிலோ ரூ.250க்கு விற்கப்பட்ட இந்த பழம் தற்போது ரூ.100க்கு விற்றால் கூட வாங்க ஆள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் குற்றாலம், ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் ரம்புட்டான் பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதன் சுவை மற்றும் மணத்தால் மரங்களில் இருக்கும் போதே வவ்வால்கள் கடித்து விட்டு சென்று விடுகின்றன.

இது போன்ற பழங்களை உண்ணும்போதுதான் நிபா வைரஸ் தாக்கப்படுவதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். எனவே இப்பழங்களை கேரளாவில் ஏற்றுமதி செய்ய முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் உள்ளிட்ட சில நகரங்களில் இப்பழங்கள் விற்பனை செய்யப்பட்டாலும் பொதுமக்கள் அச்சம் காரணமாக வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

எனவே சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து இந்த பழங்கள் குறித்த அச்சத்தை நீக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags:    

Similar News